இன்றைய இறைமொழி
வெள்ளி, 10 ஜனவரி ’25
திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின் வெள்ளி
1 யோவான் 5:5-13. லூக்கா 5:12-16
விருப்பமும் வல்லமையும்
நற்செய்தி வாசகத்தில், தொழுநோய் பீடித்திருந்த ஒருவருக்கு நலம் தருகிறார் இயேசு. இயேசுவின் சமகாலத்தில் தொழுநோய் பீடித்திருந்த ஒருவர் கடவுளிடமிருந்தும், சமூகத்திலிருந்தும், தன்னிலிருந்தும் விலக்கப்பட்டவராக இருந்தார். அவர் அருகில் மற்றவர் செல்வதும் மற்றவர் அருகில் அவர் செல்வதும் தீட்டு எனக் கருதப்பட்டுத் தண்டிக்கப்பட்டது.
இயேசுவுக்கு அருகில் வருகிற அந்த நபர், ‘ஆண்டவரே’ என்று இயேசுவை அழைக்கிறார். ‘ஐயா’ என்றும் இச்சொல்லை மொழிபெயர்க்கலாம். ‘நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்’ எனக் கேட்கிறார். இயேசுவால் இயலும் என்பது அவருடைய நம்பிக்கையாக இருந்தது. இயேசுவின் விருப்பமே இப்போது தேவையாக இருக்கிறது.
இயேசு தம் விருப்பத்தை அறிவித்ததோடல்லாமல், கையை நீட்டி அவரைத் தொட்டு அவருக்கு நலம் தருகிறார். மீண்டும் அவரைச் சமூகத்தோடும் இறைவனோடும் இணைக்கிறார்.
மூன்று வாழ்க்கைப் பாடங்கள்:
ஒன்று, இயேசுவை மீண்டும் சந்திக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல், முதல் சந்திப்பிலேயே செயலாற்றுகிறார் நபர். பல நேரங்களில் நாம் நினைத்துக்கொண்டே இருக்கிறோமே தவிர செயலாற்றுவதில்லை. நாம் ஆற்றுகிற செயல்கள்தாம் நம்மை யார் என்று சொல்கின்றனவே தவிர, நாம் எண்ணிக்கொண்டே இருக்கும் எண்ணங்களோ, வகுத்துக்கொண்டே இருக்கிற திட்டங்களோ, பேசிக்கொண்டே இருக்கிற சொற்களோ அல்ல.
இரண்டு, விருப்பம் இருந்தால் வல்லமை தானாக வரும். ஆர்வம் இருந்தால் ஆற்றல் வரும். நாம் எச்செயலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கான விருப்பம் வந்தது என்றால் வல்லமை தானாக வந்துவிடும். பல நேரங்களில் ஆர்வக் குறைவே நம் ஆற்றல் குறைவுக்குக் காரணமாக இருக்கிறது. நாம் எழுத வேண்டும் எனக் கருதிய புத்தகம், பார்க்க வேண்டும் என்று கருதிய நபர், செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட செயல் – அனைத்தும் நிறைவேறாமல் இருக்கக் காரணம் நமக்குப் போதிய ஆர்வம் இல்லாமையால்தான். இறைவிருப்பமும் இறைவல்லமையும் இயேசுவின் வல்ல செயலில் இணைந்தே செல்கின்றன.
மூன்று, வல்ல செயலின் இறுதியில் இயேசு தனியே இறைவேண்டல் செய்யச் செல்கின்றார். இயேசுவைப் பொருத்தவரையில் இறைவேண்டல் என்பது தந்தையிடம் தாம் செய்ய வேண்டிய அன்றாட பணி அறிக்கையாக இருந்தது. மக்களின் வரவும் அறிமுகமும் இருந்தாலும் இயேசு தம் முதன்மைகளோடு சமரசம் செய்துகொள்ளவே இல்லை. வாழ்வின் முதன்மைகளை நாம் வரையறுப்பதோடு அவற்றைப் பற்றிக்கொள்ளவும் வேண்டும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: