இன்றைய இறைமொழி
வியாழன், 30 ஜனவரி ’25
பொதுக்காலம் 3-ஆம் வாரம் -வியாழன்
எபிரேயர் 10:19-25. திருப்பாடல் 24. மாற்கு 4:21-25
விளக்கைக் கொண்டுவருவது எதற்காக?
நேற்றைய நற்செய்தி வாசகத்தில், ‘விதை’ மறைந்திருப்பதன் வழியாகப் பலன் தருகிறது எனக் கற்பித்தார் இயேசு. இன்றைய வாசகத்தில், ‘விளக்கைக் கொண்டுவருவது எதற்காக?’ என்று கேட்பதன் வழியாக, நாம் வெளியே நின்று வெளிச்சம் தர நம்மை அழைக்கிறார்.
இன்றைய மேலாண்மையியலில் ‘வெளிப்படுத்துதல்’ (‘manifestation’) என்னும் கருத்துரு பேசப்படுகிறது. நாம் இந்த உலகில் நமக்காக உள்ள நோக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும். நமக்கு வெளிப்படுத்தப்பட்டாலன்றி நாம் வெளிப்படுத்த இயலாது. வெளிப்படுத்துதல் நமக்கு நிகழ வேண்டுமெனில் நாம் உள்ளுணர்வுக்குச் செவிமடுக்க வேண்டும். இந்தப் பிரபஞ்சத்தின் குரல் நம்மை நோக்கி வருவதைக் கவனிக்க வேண்டும்.
இதையே இயேசுவும், ‘வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை’ என்கிறார். இருந்தாலும் நாம் கேட்பது பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நமக்கு வெளியே இருந்து வரும் அனைத்துக் குரல்களும் வெளிப்படுத்துதலாக இருக்கத் தேவையில்லை.
இறுதியில், ‘உள்ளவருக்குக் கொடுக்கப்படும்’ என்றும் ‘இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என்கிறார். இங்கே நாம் கொண்டிருக்க வேண்டிய ‘நிறைவு மனப்பான்மையை’ வலியுறுத்துகிறார் இயேசு. இந்த உலகில் நமக்கு அருகில் உள்ள ஒருவருக்கு ஏதாவது ஒன்று கிடைக்கிறது என்றால், ‘அவருக்குக் கிடைத்துவிட்டதால் நமக்குக் கிடைக்காது’ என்கிறோம். ஆனால், இந்த உலகம் அனைவருக்கும் கொடுக்கும் அளவுக்கு நிறையப் பெற்றிருக்கிறது.
நாம் இப்போது வாழ்க்கைக் கொடுப்பதைவிட கொஞ்சம் அதிகமாக அல்ல, பத்து மடங்கு அதிகமாகக் கொடுக்கும்போது நாம் வளர்கிறோம்.
மூன்று பாடங்கள்:
(அ) விளக்குத் தண்டின்மேல் ஏற்றப்பட்ட விளக்காக இருத்தல்
நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையுமே எரிந்து ஒளிர்கிற விளக்கு. இந்த விளக்கை நாம் விளக்குத் தண்டின்மேல் – அதாவது அனைவருக்கும் பலன் தருமாறு – வைப்பது நல்லது.
(ஆ) வெளிப்படுத்துதலைக் கண்டுகொள்தல் நம்மையே வெளிப்படுத்துதல்
நம் வாழ்வின் இலக்கையும் கடவுள் நமக்கென வரையறுத்துள்ள நோக்கத்தையும் கண்டுகொள்தல். நூறு பேருக்கு நடுவே நாம் அமர்ந்திருந்தாலும் நம் பெயர் சொல்லப்படும்போது நம் தான்மையை நாம் தனியாக உணர்கிறோம். அப்படியிருக்க, நூறு பேர் செய்வதை நாம் ஏன் செய்ய வேண்டும்? நமக்கென உள்ள தனித்தன்மையை நாம் கண்டுகொள்வதோடு அதை வெளிப்படுத்துவோம்.
(இ) உள்ளவராக இருத்தல்
நம்மிடம் இல்லாததை நினைத்து வருந்துவதை விட, நம்மிடம் உள்ளது பற்றி நாம் மகிழ்வதோடு அதற்காகக் நன்றியுடன் இருத்தல் வேண்டும். நன்றியுணர்வு நேர்முகமான மனநிலையை நமக்குத் தருகிறது. நம்மைப் போலவே அனைவரும் இந்த உலகில் நிறைவானவர்கள் என்று கண்டுணர வேண்டும்.
முதல் வாசகத்தில், ‘ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக!’ என்று அறிவுறுத்துகிறார் ஆசிரியர். நம்மில் ஒளிரும் ஒளி மற்றவர்களுக்கு ஊக்கம் தருவதாக.
திருப்பாடல் (24) ஆசிரியர் குறிப்பிடுவதுபோல, ‘ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே!’ என்று நம்மை மற்றவர்கள் அழைப்பார்களாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: