இன்றைய இறைமொழி
வெள்ளி, 21 மார்ச் ’25
தவக்காலம் இரண்டாம் வாரம் – வெள்ளி
தொடக்க நூல் 37:3-4, 12-13அ, 17ஆ-28. திபா 105. மத்தேயு 21:33-43, 45-46
வெறுப்பு
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் (செல்வர்-இலாசர்) கண்டுகொள்ளாமை என்னும் மனித உணர்வு பற்றி வாசித்தோம். இன்றைய வாசகங்கள் வெறுப்பு என்னும் உணர்வு பற்றிப் பேசுகின்றன.
‘வெறுப்பு’ என்பது இன்று அதிகமாக சமூக-அரசியல் வழக்கில் உள்ள சொல்லாடல். தனிமனித வெறுப்பையும் தாண்டி இன்று குழுமங்கள் ஒன்றையொன்று வெறுக்கின்றன. சமூக ஊடகங்கள் வழியாக வெறுப்பு பரப்பப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அவர்களுடைய உடன் சகோதரன்மேல் வெறுப்பு காட்டுவதை இன்றைய முதல் வாசகமும், ஒரே இனத்தவர்கள் அவர்களுடைய உடன் இனத்தவர்மேல் வெறுப்பு காட்டுவதை இன்றைய நற்செய்தி வாசகமும் எடுத்துரைக்கிறது.
தோத்தானுக்கு அருகில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு உணவு தூக்கிச் செல்கிறார் யோசேப்பு (முதல் வாசகம்). அவரைக் காண்கிற அவருடைய சகோதரர்கள், ‘இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்’ என்று சொல்கிறார்கள்.
யோசேப்பைக் கொல்லும் அளவுக்கு அவருடைய சகோதரர்கள் துணிந்தது ஏன்? (அ) அவர்களுடைய தந்தை யாக்கோபு, யோசேப்பின்மேல் தனிப்பிரியம் காட்டுகின்றார். (ஆ) சகோதரர்கள் செய்கிற திருட்டுத்தனத்தை யோசேப்பு தந்தையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறார். (இ) பெற்றோர் மற்றும் சகோதரர்கள்மேல் ஆட்சி செலுத்துவதாக யோசேப்பு கனவு காண்கிறார். அக்கனவுகளை அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறார்.
பொறாமை, கோபம் என வளர்ந்து வெறுப்பு உருவாகிறது. அந்த வெறுப்பின் தன்மை என்ன? ‘மற்றவரை இல்லாமல் செய்வது!’
இயேசு அவருடைய பணிவாழ்வில் நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்கிறார். தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் அவரை எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பு வெறுப்பு மாறுகிறது. வெறுப்பின் தன்மை கொடியது. அவர்கள் இயேசுவைக் கொலை செய்ய நினைக்கிறார்கள்.
தாம் எதிர்க்கப்படுவதையும் அவர்களுடைய வெறுப்பு உணர்வையும் ‘கொடிய குத்தகைக்காரர்’ எடுத்துக்காட்டு வழியாக உருவகமாக அவர்களிடம் அறிவிக்கிறார் இயேசு.
இயேசுவின் சமகாலத்தில் நிலங்களும் வயல்களும் தோட்டங்களும் குத்தகைக்கு விடப்படுவதுண்டு. வெறும் பேச்சுவழக்கிலேயே குத்தகைத் தொகை, பருவம், ஆண்டு ஆகியவை வரையறுக்கப்படும். எந்த வகையான எழுத்து ஆவணமும் யாரும் பெற்றுக்கொள்வதில்லை. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவாக இருந்தார்கள் அல்லது எழுதுவது வீண் செலவினமாகக் கருதப்பட்டது.
ஆக, நிலக்கிழார் நம்பிக்கை அல்லது பற்றுறுதியின் அடிப்படையில் குத்தகைதாரருக்கு திராட்சைத் தோட்டத்தை வழங்குகிறார். வழக்கமாக தோட்டம் குத்தகைக்குக் கொடுக்கும்போது தோட்டத்துக்குத் தேவையானவற்றை குத்தகைக்காரர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், இங்கே நிலக்கிழார் தாராள உள்ளத்தோடு, ‘சுற்றிலும் வேலி அடைத்து, பிழிவுக் குழி தோண்டி, காவல் மாடமும் கட்டுகிறார்.’
கனிகள் கொடுக்கிற காலம் வந்தபோது அவருக்குரிய பங்கைத் தாமாவே முன்வந்து கொடுக்க வேண்டும் என்னும் மரபை மீறுகிறார்கள் குத்தகைக்காரர்கள். பணியாளர்களையும், இறுதியில் மகனையும் அனுப்புகிறார் தலைவர். பணியாளர்களை அடித்து விரட்டுகிற குத்தகைக்காரர்கள் உரிமை கொண்ட மகனைக் கொன்று போடுகிறார்கள்.
தலைவருடைய கனிவு, தாராள உள்ளம் போன்றவவை குத்தகைக்காரர்களுடைய உள்ளங்களில் வெறுப்பை விதைக்கின்றன. பொறாமை, கோபம், பேராசை போன்ற கரணங்களுக்காக உரிமையாளருக்குரிய நீதியை வழங்க மறுக்கிறார்கள்.
இந்த எடுத்துக்காட்டு தங்களை நோக்கியது என உணர்கிற தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க நினைக்கிறார்கள்.
இயேசுவின் கனிவை யாரும் அவருக்குத் திரும்பக் கொடுக்கவில்லை. அவர்கள் வெறுப்பை வழங்குகிறார்கள்.அந்த வெறுப்பு அவருடைய உயிரையே எடுத்துவிடுகிறது.
இன்றைய நாள் நமக்கு வழங்கும் செய்தி என்ன?
நம் உள்ளத்தில் வெறுப்பு உணர்வு இருக்கிறதா? அது சொற்களாக, செயல்களாக வெளிப்படுகிறதா?
மற்றவர்களின் வெற்றியின்மேல், வளத்தின்மேல் பொறாமை கொள்ளும் நாம் அவர்களுடைய உழைப்பின்மேல் பொறாமை கொள்வதில்லை.
பாலினம், நிறம், சமயம், இனம், சாதி, மொழி, ரீதி, பொருளாதாரம் என ஏதோ ஒன்றில் சிறிய அளவில் ‘வெறுப்பு’ வெளிப்படவே செய்கிறது. இந்த வெறுப்பு ‘எரிச்சல்’ ‘ஏற்றுக்கொள்ளாமை’ என்று சின்னச் சின்ன அளவில் தன் முகத்தை வெளியே காட்டிக்கொண்டே இருக்கும்.
கண்டுகொள்ளாமையை விட வெறுப்பு கொடியது. ஏனெனில், வெறுப்பு கொண்டிருக்கும் ஒருவர் மற்றவர் அழிக்கப்படுவதையே விரும்புகிறார்.
வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?
யோசேப்பும் இயேசுவும் தங்கள் வாழ்வில் தாங்கள் பலிகடாக்கள் என்று நினைக்கவில்லை. அவர்கள் எதிர்த்தகைவுடன் நின்று வெற்றிபெற்றார்கள். மற்றவர்களின் வெறுப்பும் நிராகரிப்பும் புறக்கணிப்பும் நம் வாழ்வை அழித்துவிட நாம் அனுமதிக்க வேண்டாம்.
‘கனிவு காட்டுகிற அனைவரும் கனிவு பெறுவார்கள் என்றால் தண்ணீர் மேடு நோக்கிப் பாயும்!’ என்பது ஆப்பிரிக்கப் பழமொழி.
தண்ணீர் மேடு நோக்கி ஒருபோதும் பாய்வதில்லை!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: