இன்றைய இறைமொழி
செவ்வாய், 15 அக்டோபர் 2024
பொதுக்காலம் 28-ஆம் வாரம், செவ்வாய்
கலாத்தியர் 5:1-6. லூக்கா 11:37-41
உட்புறத்தில் உள்ளவற்றை
பரிசேயர் ஒருவர் இயேசுவைத் தன்னோடு உணவருந்த அழைக்கின்றார் (நற்செய்தி வாசகம்). இயேசு, எந்த சானிட்டைஸரும் போடாமல், அல்லது 99 சதவிகிதம் கிருமிகளைக் கொல்லும் எந்த ஹேன்ட் வாஷூம் பயன்படுத்தாமல் அப்படியே பந்தியில் அமர்கிறார்.
தம் கைகழுவாத நிகழ்வை முன்வைத்து, மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார் இயேசு. அதாவது, வெளிப்புறத் தூய்மையைவிட உள்புறத் தூய்மை அவசியமானது என்று அவர்களுக்குக் அறிவுறுத்துகிறார்.
மேலும், லூக்கா நற்செய்தியில், உள்புறத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு இயேசு ஓர் அழகான வழியை முன்வைக்கின்றார்:
‘உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்போது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாய் இருக்கும்’
நம் பாத்திரத்தைத் தூய்iமாக்குவதற்கான இனிய வழி, பாத்திரத்தில் உள்ள அனைத்தையும் வழித்து எடுத்து தர்மமாகக் கொடுத்துவிடுவது.
இது ஒரு புரட்சிகரமான செய்தியாக இருக்கிறது.
அதாவது, வெறும் சோப்பு போட்டு பாத்திரங்களைக் கழுவுவதைவிட, பாத்திரம் தூய்மையாகும் அளவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல் சிறப்பு.
இதையே இன்றைய முதல் வாசகத்தில் (காண். கலா 5:1-6), ‘அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கையே இன்றியமையாதது’ என்கிறார். நான் கொண்டிருக்கிற நம்பிக்கை என் அன்புச் செயலாக வெளிப்பட வேண்டும்.
என் சேமிப்பறையை நான் தூய்மையாக்குவதற்கான வழி, அதில் உள்ளவற்றை அப்படியே துடைத்து எடுத்து தர்மம் செய்துவிடுவது.
இப்படிச் செய்யும்போது, சேமிப்பறை தூய்மையாவதோடு, என் மனமும் பேராசை என்ற அழுக்கிலிருந்து தூய்மையாகிறது. பாத்திரத்தில் உள்ளதையும் அப்படியே கொடுக்கும்போது என் தன்னலமும், உணவின் மேலுள்ள பேராவலும் மறைந்து போகும்.
என் பாத்திரத்தோடு என் உள்ளமும் தூய்மையானால் எத்துணை நலம்!
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ அகத்தூய்மையே முதன்மையானது எனக் கருதுகிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 225)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: