• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

உயிர்ப்பின் கிறிஸ்தவர்கள்

Wednesday, April 2, 2025

 

இறையேசுவில் பிரியமானவர்களே, 'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" (கொரி. 15:14). உயிர்த்த கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கை தமது மூலைக்கல்லானது. இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல. மாறாக, இது நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை கிறிஸ்தவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி பெறும் அழைப்பாகும்.

 

தொடக்கக்கால கிறிஸ்தவர்களிடையே “இருப்போர் இல்லாதோர் என்ற பாகுபாடுகள் இல்லை. அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை: எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்" (திப. 4: 32.34). இத்தகைய கிறிஸ்தவ சாட்சிய வாழ்வைப்பற்றி சிந்திக்க கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்மை அழைக்கின்றது.

 

நாம் உயிர்ப்பின் மக்களாக, பகிர்தலிலும், ஒற்றுமையிலும், ஒருவருக்கொருவர் உதவி செய்து சாட்சிகளாக வாழ முடிகிறதா? அல்லது நலிந்தவர்கள், ஏழைகள், எளியவர்கள், கைவிடப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், அனாதைகள், நோயுற்றோர், தனிமையில் தவிப்போர் இவர்களைப்பற்றி கவலைப்படாமல் சுயநலத்துடன் நாம் செல்வங்களை அபகரித்து, சேர்த்து வைத்து, நாங்கள் செல்வந்தர்கள் எனவும், அவர்கள் ஏழைகள் என்ற பாகுபாடுடன் வாழ்கிறோமா?

 

இன்றைய சமூகம் பேராசையினால், ஊழல் செய்து, பணம் சேர்த்தல், ஏழைகளைப்பற்றி அக்கறைக் கொள்ளாமல் சுயநலத்தோடு வாழ்வதில் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், தொடக்க திருஅவை கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடனும், தங்கள் உடமைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொண்டும். எல்லோருக்கும் குறைவில்லாமல் நிறைவாய் வாழ்ந்தனர்.

 

உயிர்த்த ஆண்டவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையில், இருப்போர் இல்லாதோர் என்ற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உருவாக்க உற்சாகம் தந்தது. இந்த சகோதர உணர்வு இன்று அதிகமாக தேவைப்படுகின்றது. கிறிஸ்தவ மனநிலையுடன் நம்மை இணைத்து, மகிழ்ச்சியான கிறிஸ்தவர்கள், நம்பிக்கையான கிறிஸ்தவர்கள், பிறரன்பில் வேருன்றிய கிறிஸ்தவர்கள் என வாழ வேண்டும். மகிழ்ச்சியான கிறிஸ்தவர்கள், உயிர்த்த கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி நம் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். உயிர்ப்பால் நம்பிக்கைக் கொண்டோர் கிறிஸ்தவ மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும். இது வெறும் வெளியடையாளக் கொண்டாட்டமல்ல.

 

மாறாக, மரணத்தை வென்று, உயிர்த்த கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொள்வோரின் மகிழ்ச்சியாகும். போர்களும், மரணங்களும். வறுமையும், பசிப்பிணியும் நிறைந்த உலகில், கிறிஸ்துவின் மகிழ்ச்சி - பிறருக்கு - நம்பிக்கையின் அடையாளமாக மாற வேண்டும். மகிழ்ச்சியான கிறிஸ்தவர்கள் என்றால் பல்வேறு துன்பங்களையும், சவால்களையும் தினம்தினம் அன்றாட வாழ்க்கையில் கொண்டாட வேண்டும். புன்முறுவலுடன் இனிய சொற்களால் பிறருக்கு நம்பிக்கையை கொடுப்பவர்களாகவும், அன்பானவர்களாகவும் வாழ வேண்டும்.

 

நம்பிக்கையான கிறிஸ்தவரின் வாழ்க்கை, மனஉறுதியோடும் துணிச்சலோடும் வாழ்ந்து, பிறருக்கு முன்மாதிரியாக துணிவுடனும், மனஉறுதியுடனும் வாழ வேண்டுமென கற்றுக் கொடுப்பவர்கள். உயிர்ப்பின் மக்கள், துன்பங்களிலும், சிரமங்களிலும் துவண்டுபோவதில்லை. தேவைகளால் நொருக்கப்படுவதில்லை. மாறாக கடவுளின் வார்த்தையால் நம்பிக்கைக் கொண்டு மனஉறுதியுடன் போராடி வாழ்கின்றனர்.

 

பிறரன்பிற்கும், ஒற்றுமைக்கும், பகிர்தலுக்கும், உயிர்த்த ஆண்டவரின் வல்லமையோடு தொடர்புக்கால கிறிஸ்துவின் முன்மாதிரியோடும், புதிய சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம். உயிர்த்த ஆண்டவரின் மகிழ்ச்சி நம் இல்லங்களை நிரப்பி நம்மை உயிர்ப்பின் சாட்சிகளாக வாழ வழிசெய்யும்.

 

உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சி, நம்பிக்கையில் வாழ நம்மை பலப்படுத்தட்டும்.

 

என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் - தீபகம்

 


Share: