அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்கர்கள் அனைவருக்குமான ஒரு சிறப்பான மாதமாகும். ஏனெனில், இம்மாதத்தில் திருசெபமாலை அன்னையின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டத்தின் வழியாக திருஅவை நம் அன்னை வழியாக கிறிஸ்துவின் மறையுண்மைகளை சிந்தித்து செபிக்க நம்மை அழைக்கின்றது. இந்த செபமாலை பக்தி முயற்சி என்பது நமது குடும்பங்களில் வெறும் செபமாக இல்லாமல், இதன்வழியாக நம் குடும்பங்களில் கடவுளின் அன்பும், அருளும், அமைதியும், சமாதானமும், ஒற்றுமையும் ஏற்படுத்தும் மிகச் சக்தி வாய்ந்த கருவியாக அமைகிறது. மீண்டும் மீண்டும் சொல்லப்படும் செபமாலை செபத்தினால் இயேசுவின் பிறப்பு வாழ்க்கை, இறப்பு, மற்றும் உயிர்த்தெழுதல் ஆகிய மறையுண்மைகளை நாம் சிந்தித்து செபிக்கவும், கடவுள்மேல் நம்பிக்கை வைத்து செபிக்கவும் நம்மை அழைக்கிறது. எனவே, நாம் செய்யும் செபமாலை நம் அன்னையின் பரிந்துரையால், நாம் கடவுளோடு உறவுடன் வாழ வழி செய்யும் மிகச் சிறந்த வழியாக செயல்படுகின்றது.
கத்தோலிக்க குடும்பங்களுக்கு தினசரி செபமாலை செபிக்க ஓர் அழைப்பு
போர்களும், துன்பங்களும், வருத்தங்களும், வாட்டி வதைக்கும் இவ்வுலகில் ஒரு குடும்பமாக நம்பிக்கையுடன் செபிக்க கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிறந்த, சக்தி வாய்ந்த கருவி “திருச்செபமாலை”. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “ஒன்றாய் செபிக்கும் குடும்பம் ஒன்றாய் வாழும்” என்று கூறுகிறார். இது ஒன்றாய் திருச்செபமாலை செபிப்பதையும் குறிக்கின்றது. ஒரே குடும்பமாக நாம் சேர்ந்து திருச்செபமாலை செபிப்பதால் நாம் ஒற்றுமையுடனும், அன்புடனும், சகோதரத்துவத்துடனும் வாழ முடியும். சிறப்பாக குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் சேர்ந்து செபமாலை செபித்தால் நாம் சேர்ந்து வாழ வழிவகுக்கின்றது.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த செபமாலை பக்தி முயற்சியை பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை புனித ஜான்போஸ்கோ தம் வாழ்நாளில் கற்றறிந்து வலியுறுத்துகிறார். அவர் ஒருமுறை “திருச்செபமாலை தினமும் செபியுங்கள், அன்னை மரியாள் உங்கள் துன்பங்களிலிருந்தும், வருத்தங்களிலிருந்தும் வழிநடத்துவார்” என்று கூறினார். இந்த எளிய செபமுயற்சி பிள்ளைகளுக்கு கடவுளின் பராமரிப்பையும், அன்பையும், வழிகாட்டுதலையும் நினைவு ஊட்டுவதோடு மட்டுமல்லாமல் கடவுள் அவர்களோடு பயணிக்கிறார் என்பதையும் நினைவு ஊட்டுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் திருசெபமாலை பக்தி முயற்சியை ஒரு அன்றாட பழக்க வழக்கமாக மாற்றி நம்மை செபிக்கச் சொல்கிறார். அவர் ‘திருச்செபமாலை என்னை எப்போதும் வழிநடத்தும் செபமாகும்” என்று கூறுகிறார். குடும்பங்களில் நாம் செய்யும் இந்த செபமாலை செபிப்பதன் வழியாக நம் செபமாலை அன்னை, நம்மோடு சேர்ந்து நம்மை வழிநடத்தி அன்பிலும், அமைதியிலும் வாழ வழிச் செய்கிறார்.
செபமாலை குடும்பங்களுக்கான ஒரு சிறந்த சக்தி
செபமாலை குடும்பங்களில் சிறந்த மாற்றத்தை உருவாக்கும் ஒரு சக்தி. இதன் வழியாக நாம் செபமாலை செபிப்பதன் வழியாக நாம் கிறிஸ்துவையே நம் இல்லங்களுக்கு அழைத்து வர முடியும். கடவுளுக்கென்று ஒரு நேரத்தை நாம் ஒதுக்கி செபித்தால் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணர முடியும். செபமாலையை தனியாக செபிப்பதைக் காட்டிலும் ஒரு குடும்பமாக சேர்ந்துச் செபித்தால் தீயோனை ஒரு படையாக நாம் செபமாலை மூலம் வெல்ல முடியும். குடும்பமாக சேர்ந்துச் செபித்தால் எதிரியின் எல்லா சவால்களையும் வெல்ல முடியும். திருச்செபமாலை மாதமாக நமக்கு அளிக்கப்பட்ட இந்த மாதத்தில் குடும்பமாக தினமும் திருசெபமாலையை பக்தியுடன் செய்ய உறுதிக்கொள்வோம்.