தீபகத்திலிருந்து இறையாசீர்!
மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இந்த புனித தவக்காலத்தில் நுழையும் நாம் இயேசுவின் பாடுகள், அவரின் இறப்பு, அவரின் உயிர்ப்பை நினைவுக் கூர்ந்து, தியானித்து, நம் தந்தையாகிய கடவுளின் அன்பின் உறவை புதுப்பித்துக்கொள்ள நம்மை அழைக்கின்றது.
இப்புனித காலத்தில் நாம் நம் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவும், மனம் மாறி பிறரோடு அன்புறவில் வாழவும், அதனால் கடவுளோடு இணைந்து, அவரது உயிர்ப்பில் பங்குபெற அழைக்கப்படுகின்றோம். எனவே, இந்த நாற்பது நாள்களில் நோன்பிருந்து, செபம் செய்து, பிறருக்கு உதவி செய்து வாழ திருஅவை நம்மை அழைக்கின்றது.
தவக்காலம்: தவக்காலம் என்பது ஒருசில வசதி வாய்ப்புகளைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், கடவுளோடு நெருக்கமாக வாழவும், கடவுளைப்போல் நாமும் அன்பு செய்து வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம். தவக்காலம் என்பது "கடவுளை நம் வாழ்வில் வரவேற்கவும், அவர் நம் இதயத்தில் வாழ்வதற்கான இடம் ஒன்று தயார் செய்வதற்காகவும் திருஅவையால் கொடுக்கப்பட்ட புனிதமான காலம் இது" என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுகின்றார். எனவே இது ஒரு புனிதமானக் காலம். அருளின் காலம். இரக்கத்தின் காலம், நம் இதயங்களை கடவுள் பக்கம் திருப்புவதற்கான ஒரு சிறந்த காலம். "இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" (யோவேல் 2:12) என, கடவுள் நம்மை மனம் திருந்தி வாழ அழைக்கின்றார். இது வெறும் வெளியடையாளத்திற்கான அழைத்தல் மட்டும் அல்லாமல், உள்ளார்ந்த மனமாற்றத்திற்கான அழைப்பு. கிறிஸ்துவை இன்னும் அதிகமாக அன்பு செய்யவும், அவரோடு சென்று பாடுபடவும், இறக்கவும், அவரில் உயிர்த்தெழவும் நம்மை அழைக்கின்றது.
இந்த திருக்கால திருப்பயணத்தை மகிழ்ச்சியோடு கடந்து, மனம்மாறி ஒரு புதிய வாழ்வை, புதிய பாதையை, புதிய சமூகத்தை பாவதளை அடிமையிலிருந்து உயிர்ப்பின் விடுதலை மக்களாக வாழ திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்துகிறார்.
எனவே, செபம், தவம். தானம் இவைகளில் நாம் கடவுளுக்கு மட்டும் தெரியும் வகையில் இறைவார்த்தை நமக்குக் காட்டிய வழிமுறைகளில், பிறரை அன்பு செய்து, தேவைப்பட்டோருக்கு உதவி செய்து, தனித்திருப்போரோடு உறவாடி, பகைவரை மன்னித்து, நம்பிக்கையை பிறரோடு கொண்டாடி, ஏழை எளிய மக்களைச் சந்தித்து, உணவுத்தந்து, தாகம் தீர்த்து, ஆடை அணிவித்து, நோயுற்றோரை சந்தித்து, அயலாரை அழைத்து, தனித்திருப்போரை கவனித்து, ஆறுதல் தந்து, வறுமையின் நிமித்தம் பிற மாநிலங்களிலிருந்து வந்தோரை ஏற்று, உபசரித்து, கிறிஸ்துவாக வாழ இந்த தவக்காலம் நமக்கு ஒரு சிறந்த புனித காலமாக அமைகிறது.
தவக்காலம், உயிர்ப்பின் காலத்தில் முடிவடையும். எனவே கிறிஸ்துவோடு இறந்தால் நாம் அவரின் உயிர்ப்பில் வாழ்வோம். எனவே இக்காலத்தை தவறவிடாமல் புனிதமான இக்காலத்தைப் பயன்படுத்தி கிறிஸ்துவின் ஒளியாய் இவ்வுலகில் வாழ கடவுளின் அருளையும், இரக்கத்தையும் மன்றாடுவோம்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்