• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

தூயதொரு இதயம் கொடு... கொண்டாடு...

Saturday, May 25, 2024

 

திருஇருதய ஆண்டவர் விழா வாழ்த்துக்கள்!

 

“திரு இருதய ஆண்டவர்” விழாவைப் பற்றிய மறைக்கல்வி நமக்கு என்ன சொல்கிறது என்று சிந்திப்போம். ஜூன் மாதம் நாம் கொண்டாடும் திரு இருதய ஆண்டவர் “விழா” என்பதை, நாம் திருவழிபாட்டின் வழியாக சிந்திக்க வேண்டும்.

 

தூய ஆவியின் பெருவிழாவிற்கு பிறகு வரும் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளும் மூன்று முக்கியமான பெருவிழாக்களைக் கொண்டாடுகிறது. 

  1. மூவொரு கடவுள் தமத்திருத்துவப் பெருவிழா
  2. இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா
  3. திரு இருதய ஆண்டவர் பெருவிழா

 

இவை யாவும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கக்கூடியவை. திருத்தந்தை 16-ஆம் ஆசிர்வாதப்பர் இந்த மூன்று முக்கிய திருவழிபாட்டு மறைநிகழ்வுகள் பற்றி கூறும்போது “கிறிஸ்தவ வாழ்வின் நம்பிக்கை மறைப்பொருளை இவ்விழாக்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்குகிறது” என்று கூறுகிறார். அதாவது மூவொரு கடவுள் பற்றிய உண்மை, நற்கருணை என்னும் அருட்சாதனம், இயேசு “கடவுளும் மனிதனுமானவர்” என்கின்ற முப்பெரும் விழாக்கள் கிறிஸ்துவ நம்பிக்கையின் மறைப்பொருளும், மையப்பொருளுமாகும்.

 

எல்லா திருவழிபாட்டு நிகழ்ச்சிகளும், குறிப்பாக, திருவருகைக் காலம் முதல் தூய ஆவியானவரின் விழாவரை கொண்டாடுகின்ற எல்லாத் திருநிகழ்வுகளிலும் “கடவுள் நம்மோடு மிக நெருக்கமாக இருக்கின்றார்” என்பதை நினைவுப்படுத்துகிறது. தமத்திருத்துவ விழாவில் “யார்” நம்மோடு இருக்கின்றார் எனவும், அவர் தந்தை, மகன், தூய ஆவியாராக இருக்கின்றார் எனவும், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் விழாவில் “ஏன்” கடவுள் நம்மோடு நற்கருணையில் இருக்கின்றார் எனவும், திருஇருதய ஆண்டவர் விழாவில் “எப்படி” நம்மோடு இருக்கின்றார் எனவும், குறிப்பாக அவர் நம்மேல் வைத்திருக்கின்ற அளவில்லா அன்பினால் எனவும், நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பலவண்ண மயமான திருவழிபாட்டு ஆடைகளை அணிந்துக்கொண்டு, இந்த முப்பெரும் விழாக்களை சிறப்பித்த நாம், இறுதியாக “சிகப்பு” வண்ணத்தில் திருஇருதய ஆண்டவரின் திருவிழாக் கொண்டாட்டத்தை நாம் நிறைவுச் செய்கிறோம்.


திரு இருதய ஆண்டவர் திருவிழா “இயேசுவை” மையப்படுத்தியது. இயேசு என்னும் ஒருவரை கடவுளும் மனிதருமானவரை, நமக்காக பாடுபட்டு, மாித்து, உயிர்த்தவரை, நம்மோடு இன்றும் வாழ்கின்றவரை நாம் கொண்டாடுகிறோம். எனவே இவ்விழா யார் ஒருவர் நம்மை தொடக்கமுதல் அன்பு செய்கிறாரோ, யார் ஒருவர் இந்த விலைமதிப்பில்லா அன்பை வெளிப்படுத்துகிறாரோ, யார் ஒருவர் இந்த அன்பினால் நமக்காக இறந்து இன்றும் நம்மை அன்பு செய்கிறாரோ அவரையே நாம் சிறப்பித்து கொண்டாடுகிறோம்.


எல்லா திருநிகழ்வு கொண்டாட்டங்களிலும் இயேசு என்ன செய்தார் என்பதையே கொண்டாடுகிறோம். அதாவது இயேசு பிறந்தார், இறந்தார், உயிர்த்தார் என கொண்டாடுகிறோம். ஆனால் திரு இருதய ஆண்டவர் விழாவில் அவர் நமக்காக என்ன “வைத்துள்ளார்” என்பதை நாம் கொண்டாடுகிறோம். அவர் நமக்காக ஒரு “இதயம்” வைத்துள்ளார் என்பதை நம்புகிறோம். அவர் நமக்காக அளவில்லாத அன்பினை வெளிப்படுத்தும் இதயத்தை கொண்டுள்ளார். எனவே இயேசு நமக்காக வைத்துள்ள அன்பான இதயத்தை நாம் கொண்டாடி சிறப்பிப்போம்.

 

என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச. ச.
இயக்குநர் - தீபகம்

 


Share: