செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர் தின விழாவைக் கொண்டாடுகிறோம். அன்னை மாியாள் நல்லாசிரியருக்கான சிறந்த முன் உதாரணமாக திகழ்கின்றாள். செப்டம்பர் 8ம் தேதி, நமது ஆரோக்கிய அன்னை திருவிழா மற்றும் நம் அன்னை மாியாளின் பிறந்த நாளினைக் கொண்டாட இருக்கின்றோம். இவ்விரு விழாக்களும் நமக்கு ஒரு உண்மையை விளக்குகின்றது. அதாவது மாியாள் இயேசுவின் தாய். ஒரு நல்ல தாயாக இருக்க மட்டுமல்ல, மாறாக ஒரு நல்ல ஆசிரியராகவும் இருந்து நமக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கின்றார். ஒரு நல்ல ஆசிரியருக்கு இருக்க வேண்டிய உயாிய ஞானம், கடல்போன்ற பொறுமை, எல்லையில்லா தாழ்ச்சியுடன் கூடிய பணிவாழ்வு இம்மூன்றும் நமது அன்னை மாியாளிடம் இருந்தது. குறிப்பாக இயேசுவை இவ்வுலகிற்கு பணிசெய்ய அவருக்குக் கற்றுத்கொடுத்த பாடங்கள் அவரின் பணிவாழ்வில் சிறப்பாக பணியாற்ற உதவி செய்தது.
ஞானம்: கபிரியேல் அதிதூதாிடம் மாியாள் ‘இது எப்படி நிகழும்” (லூக். 1:39) என்ற கேள்வி, ஒரு நிகழ்வு நடக்க முடியாது என்று தொிந்தும், அதாவது தான் கடவுளின் தாயாக வேண்டும் என்பது, திருமணமாகாத ஒருவரால் முடியாதென்று தொிந்தும் அதைப்பற்றி ஆழ்ந்து அறிய அவள் கேட்ட கேள்வி, மாியாள் ஞானத்தின் இருப்பிடம் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணமாகும். ஒரு நல்லாசிரியர், கேள்வி கேட்பதும், புரிந்துக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும், கடவுளின் திட்டத்திற்கு கீழ்ப்படிவதும் ஆசிரியருக்குரிய சிறந்த பண்புகளாகும். இப்பண்புகளை அன்னை மாியாளிடம் நாம் கற்றுக் கொள்வோம்.
பொறுமை: மாியாள் தன் வாழ்நாள் முழுவதும் அளவு கடந்த பொறுமையைக் கடைப் பிடித்தாள். இயேசு தான் பொதுவாழ்வைத் தொடங்கும்வரை அன்னை மாியாள் அவருக்கு நல்ல பண்புகளை ஊட்டி வளர்த்தார். ஆசிரியர்கள் மாணவர்களை பக்குவமான மாணவர்களாக உருவாக்கி வாழ்வில் அவர்களை உயர்ந்த நிலைக்கு மாற்ற வேண்டும்.
தாழ்ச்சியுடன் கூடிய பணிவாழ்வு: ‘இதோ ஆண்டவரின் அடிமை” (லூக். 1: 38) என்கிற அவரின் கீழ்ப்படிதல் கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல், பணி செய்தல் என்பவை மாியாளின் வாழ்வில் சிறந்து விளங்கிய புண்ணியமாகும். எது நடந்தாலும் அது ஆண்டவருக்கு பெருமை என்கின்ற அவரது வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆசிரியர்கள் தாழ்ச்சியுடன் கூடிய கீழ்ப்படிதலை சிறந்த புண்ணியமாக கருதி வாழ்ந்து காட்ட வேண்டும். ஆசிரியர் பணி என்பது பணிபுரிய கடவுளால் கொடுக்கப்பட்ட சிறந்த அழைத்தல். இப்பணியில் மாணவர்களை மையப்படுத்தி கல்வி பணியாற்றி சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவது ஆசிரியாின் கடமையாகும்.
நாம் கொண்டாடும் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருவிழா ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டுவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் இருக்க, நம் அன்னை ஒரு முன்மாதிரியாக விளங்குகிறாள். கல்வி ஒருவருக்கு ஆரோக்கியமான வாழ்வைப் பெற்றுத்தர வேண்டும். தான் ஆரோக்கியமாக வாழ்ந்து பிறரையும் ஆரோக்கியமாக வாழ வழி செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, உள்ளத்திலும் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும். ஆரோக்கிய அன்னையின் முன்மாதிரியைப் பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களை ஆற்றுப்படுத்தி, ஊக்கப்படுத்தி, தேற்றி, நம்பிக்கையை ஊட்டி வழிநடத்த வேண்டும். அன்னை மாியாள் இயேசுவின் தாயாக இருப்பதைப்போல, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாயாக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர். ஞானம், பொறுமை, தாழ்ச்சி இம்மூன்று புண்ணியங்கள் வழியாக இயேசுவைப்போன்ற நல்ல மனிதர்களை உருவாக்க ஆரோக்கிய அன்னையின் பெயரால் நம் ஆசிரியர்களை வாழ்த்துவோம்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குனர் – தீபகம்