தீபகத்திலிருந்து இறையாசீர்!
அன்பான தீபகத்தின் செபத்திருப் பயணிகளே,
தவக்காலம் ஒரு புனிதமான காலம். இந்த புனிதமான தவக்காலத்தை நல்ல முறையில் கடந்து செல்ல நாம் செபம், தபம், தானம் (ஏழைகளுக்கு உதவுதல்) ஆகிய மூன்று புண்ணிய செயல்பாடுகளால் நம்மை தயாரித்து புனிதராக வாழ நம்மை அழைக்கிறது.
தானம்: திருச்சபை இந்த புனித காலத்த பொறுப்புடனும், ஆழமான விசுவாசத்துடனும், நம் ஆன்மீக வாழ்வை ஆன்ம சோதனை செய்து விசுவாச மறுமலர்ச்சி பெற்று கிறிஸ்துவோடு நம் பாவத்தில் இறந்து அவரோடு உயிர்ப்பில் பங்குபெற நம்மை அழைக்கிறது. இந்த மனமாற்றத்தின் காலமாக மூன்று தூண்களாகிய செபம், தபம், தானம் (ஏழைக்கு உதவுதல்) ஆகியவை நம்மை நம் சகோதர சகோதரிகளோடும், இறைவனோடும் ஒன்றிணைக்க நம்மை அழைக்கிறது.
செபம்: தவக்காலம் செபம் செய்வதற்கு உகந்த காலம், இக்காலத்தில் நாம் நமது அன்றாட வாழ்வை தகுந்த நேரத்தை தேர்ந்தெடுத்து தனிமையாக, குடும்பமாக, இறைவார்த்தையை (படிப்பதிலும், வாசிப்பதிலும், தியானிப்பதிலும் பிறரோடு பகிர்தலிலும்) செபிக்கலாம். இக்காலத்தில் தினமும் திருப்பலிக்கு செல்வது, ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை முழுமையாக காண்பது, அருட்சாதனக் கொண்டாட்டங்களில் முழு விசுவாசத்தோடு பங்கேற்பது ஆகிய வழிகளின் மூலம் நாம் செபிக்கலாம், இறைவனோடு ஒன்றித்து வாழலாம். செபம் நம் மனமாற்றத்திற்கு வழிவகுத்து இறைவனோடு ஒப்புரவாக நம்மை அழைக்கிறது.
தபம்: புனித தவக்காலத்தில் தபம் செய்வது என்பது வெறும் உண்ணாமல் நோன்பு இருப்பது மட்டுமல்ல மாறாக நம்மை விசுவாச வாழ்வில் கடவுள்மேல் நம்பிக்கை வைத்து அவரது கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவரின் திருச்சித்தத்தை அறிந்து நம் ஆன்மாவை சுத்தப்படுத்தி இந்த 40 நாட்களும் இறைவனோடு ஒன்றித்து வாழ வழி வகுக்கிறது. எனவே நம் நோன்பு செயல்கள் நம்மையும், பிறரையும் இறைவனிடம் அழைத்துச் செல்ல துணை புரிய வேண்டும்.
ஏழைக்கு உதவுதல்: உணவு, பொருட்கள் என தானம் செய்வது ஏழைக்கு கொடுப்பது நமது கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் செயல் திட்டமாகும். அடிப்படை கடமையுமாகும். கடவுளின் இரக்கத்தை பெற்றவர்களாய் நாமும் பரிவுடனும், இரக்கத்துடனும், அன்புடனும் பிறரை மதிக்கவும், நேசிக்கவும், உகந்த காலமாக நமக்கு உதவுகின்றது. இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த அடிப்படைகளான ஏழையருக்கு உதவுதல், துயருறுவோருக்கு ஆறுதல், பசித்தோருக்கு உணவளித்தல், தாகமுற்றோருக்கு தண்ணீர் அளித்தல், ஆடையின்றி இருப்போருக்கு ஆடையளித்தல், அந்நியரை அன்பு செய்தல், நோயுற்றோரை சந்தித்தல், சிறைப்பட்டோரை சந்தித்தல் என கிறிஸ்து வாழ்வை முழுமையாக அனுசரிக்க இத்தவக்காலம் நம்மை அழைக்கின்றது.
எனவே இப்புனிதமான காலத்தை அர்த்தமுள்ளதாக கடைப்பிடித்து நிறைவு செய்து கிறிஸ்துவோடு இறந்து அவரின் உயிர்ப்பில் நம்மை பங்குகொள்ள அழைக்கின்றது. ‘கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம்” (உரோ. 6:8).
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் - தீபகம்