ஜூலை மாதம் என்பது சலேசியர்களின் சிறப்பு மாதம். கடல் வழியாக துணிச்சலான பயணம் செய்து நம்பிக்கையை இந்தியாவிற்கு கொண்டு வந்த எங்கள் புரவலர் புனித தோமாவை நினைவு கூறும் மாதம். நம் திருத்தூதர் தோமாவிடமிருந்து நமது மறைக்கல்வி ஆசிரியர் மற்றும் இளம் நம்பிக்கையாளர்கள் ஆழ்ந்த உத்வேகத்தை பெறமுடியும்.
புனித தோமையார் பெரும்பாலும் 'சந்தேக தாமஸ்’ என்று நினைவு கூறப்படுகிறார். ஆயினும், அவரது வரலாறு பலவீனம் அல்ல. ஆனால் உண்மைக்கான ஆழமான, நேர்மையான தேடல். இவர் உயிர்த்த இயேசுவின் காயங்களைத் தொட்டு, 'என் ஆண்டவரே! என் கடவுளே!” என்று அறிக்கையிட்டார் (யோவான் 20:28). இவருடைய சந்தேகம் நிறைந்த நற்செய்தி நிகழ்ச்சிகள் மிக சக்திவாய்ந்த அறிவிப்புகளில் ஒன்றாக மாறியது. மறைப்பணியாளர்களாக புனித தோமாவின் வாழ்க்கையை வெறும் வகுப்பிற்காக பயன்படுத்தாமல், நம் இளைஞர்களின் இதயங்களை வளப்படுத்த பயன்படுத்துவோம். நமது இளைஞர்களுக்கு புனித தோமையாரின் திருப்பயணம் மிகவும் மதிப்புமிக்க பாடமாக விளங்குகிறது.
இன்றைய இளைஞர்கள் அடையாளம், உண்மை, துன்பம் மற்றும் நோக்கம், பற்றிய கேள்விகளின் உலகில் வாழ்கின்றனர். சந்தேகம் என்பது ஒரு பாவமல்ல. அது ஒரு அழைப்பு என்று புனித தோமா வெளிப்படுத்துகின்றார். கேள்விகளை கேட்பது என்பது, இளைஞர்கள்-குறையாக எண்ணாமல், அதை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். ‘புனித தோமாவே நீங்கள் தனியாக இல்லை நாங்களும் உங்களோடு பயணிக்கின்றோம்’ என்று உறுதியளிப்போம். 'தோமா நீ தனியாக இல்லை. உங்கள் கேள்விகளையும், நீங்கள் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்த விரும்புவதையும் நான் வரவேற்கிறேன்" என்று இயேசு அவரின் கேள்விகளை வரவேற்கிறார்.
புனித தோமையாரை புரிந்துக்கொள்வதற்கு மனித அறிவினால் மட்டும் சிந்தித்தல் முடியாது. மாறாக, தூய ஆவியின் கருணையும், சக்தியும் நமக்குத் தேவை. தூய ஆவியானவர் உலகின் ஒவ்வொரு மாற்றத்திற்கு பின்னாலும் இருந்து செயல்படுகின்ற ஒரு மாபெரும் சக்தி. மறைப்பணியாளர்கள், நற்செய்தி அறிவிப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் நம் வாழ்வில் தூய ஆவியின் பங்கை புரிந்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், குழப்பங்கள் நிறைந்து சோர்ந்து போகும் இதயங்களை அவர் ஆறுதல்படுத்துகின்றார். கிறிஸ்துவை அடையாளம் காண, மனதை அவர் அறிவூட்டுகிறார். கடவுளின் அழைப்பிற்கு 'ஆம்" என்று சொல்லும் மனவுறுதியை அவர் அளிக்கின்றார்.
நம்பிக்கை வெறுமனே படித்து கற்றுக்கொள்ளப்படுவது கிடையாது. அது அனுபவத்தின் மூலம், நம்மை ஆட்கொள்ள வேண்டும். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை புனித தோமா சந்தித்தது போல, ஒவ்வொரு இளைஞனும் இயேசுவின் தனிப்பட்ட அனுபவத்தைப் பெற நாம் உதவவேண்டும்.
‘சந்தேகம் தோல்வியல்ல’ என்பதை புனித தோமையார் நமக்குக் கற்பிக்கிறார். குறை கூறுவதற்கும், மற்றவர்களை அவமானப்படுத்துவதற்காகவும் இல்லாமல், நேர்மையுடன் அணுகினால், அது புதிய பலவழிகளை உருவாக்க வழிவகுக்கும். கேள்வி கேட்க தயங்காத, அதே நேரத்தில் பயணம் செய்யவும், இறைவேண்டல் செய்யவும், இறைவனை சந்திக்கவும் தயாராய் இருக்கும் நல்ல இளைஞர்களை உருவாக்குவோம்.
எங்கள் புரவலரைக் கொண்டாடுவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கேள்விகளிலிருந்து நம்பிக்கைக்கும், நிச்சயமற்ற-தன்மையிலிருந்து அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், சந்தேகத்திலிருந்து பிறரை பக்திக்கு வழிகாட்டவும், உறுதியான முடிவுகளை எடுக்கும் நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் முயல்வேம்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்