(திருத்தந்தை லியோ XIV அவர்களின் 2026 நோன்புக்காலச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு)
பிரியமான குழந்தைகளே, இளைஞர்களே, அன்பான பெற்றோர்களே,
நோன்பு காலம் என்பது வெறும் "சாப்பாடு குறைப்பது" அல்ல. அது மனமாற்றம் பெறும் ஒரு ஆன்மிகப் பயணம்.
திருத்தந்தை லியோ XIV அவர்கள் தனது 2026 நோன்புக்காலச் செய்தியில் கூறுகிறார்: "ஒவ்வொரு மாற்றமும் கடவுளின் வார்த்தையை கேட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது."
அதாவது... நாம் செவிமடுத்து கேட்கத் தெரிந்தால், கடவுளின் வார்த்தையை மனமுவந்து ஏற்றுக்கொண்டால், நம் வாழ்க்கை மாறும்.
"உன் வார்த்தை என் பாதைக்கு விளக்கும், என் வழிக்கு ஒளியும் அதுவே" (திபா. 119:105)
"எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமைகளாக வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன், ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்." (வி.ப. 3:7)
நம் கடவுள் செவிமடுத்து நம் குரலை கேட்கும் கடவுள். அவரது இதயம் ஏழைகளின் அழுகையை இரக்கத்தோடு கேட்கும்.
குழந்தைகளே:
* அம்மா, அப்பா பேசும்போது கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள்.
* ஆசிரியர் சொல்லும் நல்லவற்றை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
* நண்பன் சோகமாக இருந்தால், அவனிடம் பேசுங்கள், அவன் சொல்வதை கேளுங்கள்.
இளைஞர்களே:
* சமூக வலைத்தளங்களில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம்.
* தினமும் குறைந்தது 10 நிமிடம் இறைவார்த்தையை வாசித்து அமைதியாக தியானியுங்கள்.
* வீட்டில் பெற்றோரின் குரலையும், உங்கள் உள்ளத்தின் குரலையும் கேளுங்கள்.
பெற்றோர்களே:
* உங்கள் குழந்தைகளின் மனஅழுத்தங்களை கவனமாக செவிகொடுத்துக் கேளுங்கள்.
* மற்றவர்மீது குற்றம் சாட்டாமல் பேசுங்கள்.
* குடும்ப ஜெபத்திற்கான நேரத்தை உருவாக்குங்கள். குடும்பமாக ஒன்று சேர்ந்து செபியுங்கள், செபமாலை சொல்லுங்கள், பக்திப் பாடல்கள் பாடுங்கள், தியானியுங்கள்.
செவிமடுத்துக்கேட்பது - அன்பின் முதல் அடையாளம்.
உடலிலும் உள்ளத்திலும் நோன்பு
திருத்தந்தை லியோ XIV அவர்கள் சொல்கிறார்: "நோன்பு என்பது கடவுளின் வார்த்தையை ஏற்க நம்மைத் தயார்ப்படுத்தும் வழி”
நோன்பு என்றால்:
* கோபத்தைக் குறைத்து உறவை வளர்த்தல்
* கெட்ட வார்த்தைகளை, தடித்த வார்த்தைகளை பேசுவதை தவிர்த்து, இனிய நல்ல வார்த்தைகளை பேசுதல்
* சமூக வலைத்தள பயன்பாட்டை கட்டுப்படுத்தி பிறரோடு உறையாடுதல்
இயேசு சொல்கிறார்:
"மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார். (மத்தேயு 4:4)
இந்த மார்ச் மாதத்தில்
* வாரத்தில் ஒரு நாள் ஒருவேளை உணவைத் தவிர்த்து பசித்தோருக்கு உணவளிக்கலாம்.
* தினமும் 15 நிமிடம் இறைவார்த்தையை வாசித்து, பிறருக்கு எடுத்துரைக்கலாம்.
* ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒருவகையில் தேவையுள்ளோருக்கு உதவி செய்யலாம்.
இத்தவக்காலத்தில் எவரேனும் ஒருவருக்கு உதவி செய்யாமல் இரவு தூங்கச் செல்லக் கூடாது.
திருத்தந்தை லியோ XIV மிகவும் அழகாக அழைக்கிறார்: "மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து விலகுவோம்"
இது நமக்கு இன்று எல்லோரோடும் உறவுக்கொள்ள மிகவும் தேவையான நோன்பு!
நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்:
* நான் கெட்ட வார்த்தைகள், தடித்த வார்த்தைகள், தீய வார்த்தைகளை பேசுகிறேனா?
* நான் யாரையாவது பின்னால் குறை சொல்கிறேனா? புரணி பேசுகிறேனா?
* நான் சமூக வலைத்தளத்தில் வெறுப்பை உண்டாக்கும் செய்தியை பகிர்கிறேனா? பகையை வளர்க்கின்றேனா?
"கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. கேட்போர் பயனடையும்படி, தேவைக்கேற்றவாறு, அருள்வளர்ச்சிக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்." (எபேசியர் 4:29)
குடும்ப உறுதி: இம்மாதத்தில்
* நாங்கள் கோப வார்த்தைகள் தவிர்த்து, மாறாக அன்பான வார்த்தைகளைப் பேசுவோம்.
* நாங்கள் இழிவான கருத்துகள் சொல்வதை தவிர்த்து, பிறரைப்பற்றி உயர்வாக பெருமையாகப் பேசுவோம்.
* நாங்கள் எப்பொழுதும் பிறரை ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்துவோம்.
சாக்கு உடை அணிந்து, புழுதியைத் தங்கள் மேல் பூசிக் கொண்டு நோன்பிருக்குமாறு அம்மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று மக்கள் ஒன்று கூட்டப்பட்டனர். இஸ்ரயேல் இனத்தார் வேற்றினத்தாரிடமிருந்து பிரிந்து நின்றனர். எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முன்னோரின் குற்றங்களையும் அறிக்கையிட்டனர். ஒவ்வொரு நாளும் பகலில் கால் பகுதியைத் தங்கள் இடத்திலேயே எழுந்து நின்று கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டநூலை வாசிப்பதிலும், மற்றொரு கால் பகுதியைத் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதிலும், தங்கள் கடவுளாகிய ஆண்டவரைத் தொழுவதிலும் செலவழித்தனர். (நெகேமியா 9:1-3)
அதேபோல்,
* ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து செபிப்பதும்,
* ஒரு பங்காக ஒன்றிணைந்து திருப்பலியில் பங்கேற்று கொண்டாடுவதும்,
* இளைஞர்கள் ஒரு குழுவாக இறைவார்த்தையை வாசிப்பதும், தியானிப்பதும், நாம் செய்யும் நோன்பாகும்.
* ஒரு சமூகத்திற்கான மாற்றத்தையும், தனி மனிதனுக்கான மாற்றத்தையும் கண்டு நம்மை கிறிஸ்துவோடு ஒன்றிணைக்கும் காலம் இத்தவக்காலம்.
நோன்பு = தனிப்பட்ட மாற்றம் + சமூக மாற்றம்
திருத்தந்தை லியோ XIV அவர்கள் நமக்கு ஒரு அழைப்பு விடுக்கிறார்:
* அன்பின் நாகரிகம் கட்டவும்
* அமைதியின் வார்த்தைகள் பேசவும்
* நீதிக்காக பசியுடன் காத்திருக்கவும்
"நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர்". (மத்தேயு 5:6)
மார்ச் மாத திர்மானம்
குழந்தை: நான் தினமும் 5 நிமிடம் இயேசுவுடன் பேசுவேன்
இளைஞர்: நான் பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் கொள்வேன்
பெற்றோர்: என் குடும்பத்திற்கான ஜெப நேரத்தை உருவாக்குவேன்
இறுதி ஜெபம்
"எனக்கு கேட்கும் இதயம் தாரும் ஆண்டவரே, எனக்கு சுத்தமான வார்த்தைகள் பேசும் நாவைத் தாரும், நோன்பின் மூலம் மனமாற்றமடையும் மனதைத் தாரும். எங்கள் குடும்பங்கள் அன்பின், சமாதானத்தின், ஒற்றுமையின், இல்லமாக மாறட்டும். ஆமென்."
இந்நோன்பு காலத்தில் இறைவார்த்தையை செவிமடுத்துக் கேட்போம், நோன்பிருப்போம். மனமாற்றமடைவோம்!
என்றும் அண்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்