தீபகத்திலிருந்து இறையாசீர்!
அக்டோபர் மாதம் என்றாலே எப்போதுமே நமக்குக் கொண்டாட்டமானது. இம்மாதம் “புனித செபமாலையின் மாதம்”. இம்மாதத்தில் நம் வீடுகள், பங்குகள், செபத்தால், மலர்களால், மின்விளக்குகளால், மாதாவின் பாடல்களால் மீண்டும் உயிர்ப்பெறுகின்றன. செபமாலை நம் முன்னோர்கள், பெற்றோர்கள், மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நம்பிக்கையாளர்கள் பல நூற்றாண்டுகளாக செபமாலை சொல்லி வருகின்றார்கள். அந்த செபமாலை பக்தியை நாமும் கையில் எடுத்துக்கொண்டு, அன்னை மரியாளோடு இயேசுவின் வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்வோம்.
இன்றைய உலகம் எவ்வளவு வேதனைக்குள்ளாகியுள்ளது. காசா, உக்ரைன் போன்ற நாடுகளில் போர்கள் பல குடும்பங்களைப் பிளந்து, குழந்தைகளைத் தாய் தந்தையற்றவர்களாக ஆக்கியுள்ளன. நம் இந்தியாவில்கூட, கோடிக்கணக்கான மக்கள் உணவு, கல்வி, மரியாதை, வேலை ஆகியவற்றிற்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். சாதி, மொழி, மதம், வர்க்கம் என்ற பெயரில் பிளவுகள் இன்னும் வலுவாக உள்ளன. இதில் எப்போதுமே ஏழைகள், பெண்கள், குழந்தைகளே அதிகமாகத் துன்புறுத்தப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழலில் நம்மால் அமைதியாக இருக்க முடியாது. கிறிஸ்துவின் சீடர்களாக நாமும் பதிலளிக்க வேண்டும். அந்தப் பதிலின் முதல்படிதான் “இந்த செபமாலை” செபம்.
செபமாலை என்பது வெறும் வார்த்தைகளைக் கூறுவது அல்ல. அன்னை மரியாளின் கையைப் பிடித்து, அவரின் மகனாகிய “அமைதியின் அரசராம் இயேசுவிடம்” (எசா. 9:6) நடத்திச் செல்லப்படுவதாகும். திருத்தந்தை பிரான்சிஸ்: “செபமாலை என் வாழ்நாளை எப்போதும் இறைவனோடு இணைத்துச் செல்கிறது. அது எளிய மக்களின் செபம், புனிதர்களின் செபம், என் இருதயத்தின் செபம் என்று கூறுகிறார்”.
செபமாலை என்பது அமைதிக்கான பக்தி முயற்சி. மகிழ்ச்சி, துக்கம், மகிமை, மற்றும் ஒளியின் மறையுண்மைகளைச் செபிக்கும்போது, மெதுவாக கிறிஸ்துவின் அன்பு, அமைதி நம்முள் வேரூன்றி வளர்கிறது. நம்மால் மன்னிக்க முடிகிறது, நம்பிக்கையுடன் வாழ முடிகிறது. அமைதியின் கருவிகளாக மாற முடிகிறது. திருத்தந்தை 14-ம் லியோ “செபமாலையை நம்பிக்கையோடு சொல்லும்போது விண்ணுலகத் தாயின் உதவியைப் பெற மிகச் சிறந்த வழி” என்று கூறுகிறார்.
அக்டோபர் மாதம், நம் பங்குகளில் மாலை நேரங்களில் ஒரு சிறிய திருவிழாவைப்போல கொண்டாடுவார்கள். கற்பனைச் செய்துப் பாருங்கள். சூரியன் மறையும்பொழுது, குடும்பங்கள் ஒன்று கூடி ஒரு சிறிய மேசையை வைத்து, அழகாக ஒரு புடவைக்கொண்டு அலங்கரித்து, அருகிலுள்ள தோட்டத்திலிருந்து மலர்கள் எடுத்து வந்து, அன்னை மரியாளின் சுரூபம் மையத்தில் வைத்து, அதனருகே மெழுகுத்திரி ஏற்றி, தூபம் காட்டி, மாலைகள் தொடுத்து அக்கம் பக்கத்தினரை அழைத்து குழந்தைகள் முன்வரிசையில் அமர, தாய் தந்தையர்கள். செபமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு செபமாலை செய்து, மரியன்னையின் பாடல்களைப் பாடி, ‘வாழ்க வாழ்க, வாழ்க மரியே’ என்ற பாடலோடு செபமாலை முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து பங்குத் தந்தையும் வந்து வீடுகளை ஆசீர்வதித்து, அனைவரோடும் சேர்ந்து செபிப்பார். செபத்திற்குப்பின் எளிய தேனீர், சிறிய இனிப்பு மற்றும் பல வகையான உணவுகளை பகிர்ந்து, மகிழ்ந்து கொண்டாடுவர். இந்த செபமாலை பக்தி முயற்சி அன்பை, ஒற்றுமையை, சமூகத்தை, சகோதரத்துவத்தை வளர்க்கிறது. குழந்தைகள் இதன்மூலம் செபம் என்பது கடமையல்ல, வாழ்வின் கொண்டாட்டம் என்பதை கற்றுக் கொள்கிறார்கள்.
இம்மாதத்தில் ஒவ்வொரு குடும்பமும், பங்கும், சிறிய கிறிஸ்தவக் குழுக்களும் இந்த பாரம்பரிய பக்தி முயற்சியை மீண்டும் கொண்டாட தீபகம் உங்களை அன்புடன் அழைக்கிறது. நம் வீட்டில் செபமாலை செய்ய குடும்பமாய் ஒன்றுகூடுவோம். அக்கம் பக்கத்தினரை அழைப்போம். நம்மிடமுள்ள எளிய பொருட்களால் மாதாவை அலங்கரிப்போம். இறைவன் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். வெளி அலங்காரங்களை அல்ல. உலக அமைதிக்காக, போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, வறுமையில் வாடுவோருக்காக நம் இருதயத்தின் மாற்றத்திற்காக செபமாலையை பக்தியுடன் செபிப்போம்.
“அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்” (மத்.5:9) என இயேசு கூறுகிறார். “அமைதி நம்முள் துவங்குகிறது. நாம் கூடி செபிக்கும்போது, நாமும் அமைதியின் கருவிகளாக மாறுகிறோம்” (திருத்தந்தை லியோ14). இந்த அக்டோபர் மாதத்தை உண்மையான செபம், நம்பிக்கை, மகிழ்ச்சியின் மாதமாக மாற்றுவோம், அன்னை மரியாளிடம் நம் வீடுகளையும், பங்குகளையும், பிள்ளைகளையும், உற்றார், உறவினர், நண்பர்கள் ஒப்புக்கொடுத்து செபித்து, நம்மை அமைதியின் தூதுவர்களாகவும், இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக வாழ இம்மாதத்தில் செபிப்போம்.
செபமாலை அன்னையே! அமைதியின் அரசியே! இவ்வுலகிற்கு அமைதியை, சமாதானத்தை தந்தருளும். காசா, உக்ரைன் போர் நடக்கும் எல்லா பகுதிகளிலும் ஒற்றுமையையும், அமைதியையும் தந்தருளும். உலகில் வாடும் எளிய மக்களுக்கு நம்பிக்கையைத் தாரும். எங்கள் குடும்பங்களில், பங்கில், ஊரில், நாட்டில், நீதி, உண்மை, அமைதி, சமத்துவம் என்னும் விழுமியங்கள் நிலைக்கச் செய்தருளும். எங்களை அமைதியின் கருவிகளாக மாற்றி, உமது பாதையில் வழிநடத்தியருளும். ஆமென்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்