தீபகத்திலிருந்து இறையாசீர்
"உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை, அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” (லூக். 24:5)
கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! அல்லேலூயா!
அநீதி, பயம் மற்றும் துன்பங்களால் காயமடைந்த உலகில், கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி இன்று புதிய வலிமையுடன் ஒலிக்கிறது:
"கிறிஸ்து நம் நம்பிக்கையாக உயிர்த்தெழுந்தார்!”
இச்செய்தி இன்று இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் மிகவும் பொருத்தமானது. ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர், இவர்கள் மனித மரியாதைக்காக இன்னும் போராடுகின்றனர். சாதி, மத வேறுபாடுகள் காரணமாக அவர்கள் அநீதியையும் வறுமையையும் சுமந்து வருகிறார்கள்.
இளைஞர்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். வேலைவாய்ப்பு குறைவு, சமூக கலக்கம், போதைப்பொருள் மற்றும் வன்முறை, உலகளாவிய போர்களின் தாக்கம், இவை அவர்களின் எதிர்காலத்தை குழப்புகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த சூழலில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், கிறிஸ்து உயிர்த்தெழுந்தது ஒரு விழா மட்டும் அல்ல… அது ஒரு வாழும் நம்பிக்கை.
இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு சொல்லுவது:
அன்பு வெறுப்பை வெல்லும்.
உண்மை பொய்யை வெல்லும்.
உயிர்ப்பு மரணத்தை வெல்லும்.
கிறிஸ்துவில் உயிர்த்த நம்பிக்கை என்பது ஒரு ஓடை. அது ஓரிடத்தில் நிற்பது அல்ல, அது ஓடிக்கொண்டே இருக்கும், பல மாற்றத்தை உருவாக்கும் சக்தி.
"நம்பிக்கை ஏமாற்றாது” (உரோ 5:5)
கிறிஸ்து ஏழைகளுடன் இருக்கிறார். கிறிஸ்து ஒடுக்கப்பட்டவர்களுடன் நிற்கிறார்.
இளைஞர்களை நம்பிக்கையின் பயணிகளாக அழைக்கிறார்.
மரியாதையை காக்கவும், அமைதியை உருவாக்கவும், உடைந்த இதயங்களுக்கு நம்பிக்கையைத் தரவும், இருள் நிறைந்த இக்காலத்தில், நாம் ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
கிறிஸ்து, கல்லறையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு நீதியிலும், அன்பிலும், தைரியத்திலும் உயிர்த்தெழுந்தார்! நாமும் அவருடன் உயிர்த்தெழுவோம்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச
இயக்குநர் தீபகம்