நாள்: மார்ச் 22-23, 2025
இடம்: வீரளூரில் இல்லம் தேடி இறை அரசு
நேரம்: காலை முதல் - இரவு வரை
அனைவருக்கும் இனிய வணக்கம்!
“பயணங்கள் முடிவதில்லை!” ஆம். நமது இல்லம் தேடி இறையரசு பணிகளுக்காக ஆலோசித்து திட்டமிட்டு முடிவெடுத்து ஒப்புதல் பெற்று வலுவாக புறப்பட்ட இப்பயணம் என்று இறை இயேசுவின் இலக்கு நோக்கி பயணித்து நிறைவடைகிறதோ அதுவரை இப்பயணங்கள் தொடரும். அவருடைய பயணத்தில் தீபக இயக்குனர் அ.ப. ஜேசுதாஸ் வழியாக நம்மைக் கருவியாக பயன்படுத்தி வருகிறார் மூவொரு இறைவன். அதற்காக நாம் நன்றி சொல்வோம்.
இது இறை அழைப்பு.
தி.பணி: 13:02,03-ல் உள்ளது போல் தூய ஆவியாரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்துவமான அழைப்பு. ஆக மிகக் கவனமாக ஒவ்வொரு தடம் பதிக்க வேண்டும்.
“தி.பணி: 15:35-ல் அறிவித்து விட்டோம் - முடிந்தது நமது பணிகள்” என அமர்வதல்ல நமது பணிகள். ‘அறிவித்து விட்டு வந்தோமே’ என எண்ணாமல், ‘நமது சகோதர சகோதரிகள் எவ்வாறு உள்ளனர், வாருங்கள்’ என சென்று நிறை குறைகளை ஆய்வு செய்து நிறைவாக்குவதே தொடர் பணிகளின் பயணங்கள்.
வி.பய: 04:12,16-ல் கூறப் பட்டுள்ளது போல், ‘எனக்கு குறைபாடுகள் உண்டு, எப்படி செய்வேன்’ என எண்ணாமல், ‘என்னை இயக்குபவர் இறைவன்; பேச வைப்பவர் அவர்’ என்ற துணிவோடு செயல்படல் வேண்டும்.
இப்பேர்பட்ட சிந்தனைகளோடு, தீபகம் வாகனம், அ.ப. ஜேசுதாஸ் இயக்குனரோடு தன்னார்வலர்களை சுமந்து கொண்டு ஆங்காங்கே வழியில் மற்றவர்களையும் சுமந்து வீரளூர் வந்து சேர்ந்தது. மதிய நேரமானாதால் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு சென்று செபித்து விட்டு, மதிய உணவு முடித்து தங்குமிடம் வந்து, சிறிது ஓய்விற்குப்பின், களத்திற்கு செல்லுமுன் கருத்து பகிர்வுகள் செய்து, இல்லங்கள் சென்று சந்தித்து வந்தோம். இல்லங்கள் அதிகம் என எண்ணினோம். ஆனால், போன வாரம் பெரும் பகுதிகள் சந்தித்து விட்டதால், சந்திக்காத வீடுகளை வழக்கம் போல சந்தித்து, அவர்களுடைய நிறை குறைகளை கேட்டறிந்து, பின் இறைவார்த்தைகள், பாடல்கள், செபங்கள் வழியாக உற்சாகம், நம்பிக்கை ஊட்டி மகிழ்வித்து வந்தோம். மாலை திருப்பலி பங்கு அ.ப. அலெக்ஸ் அவர்கள் நிறைவேற்றினார் .
இரவு உணவு முடித்து விட்டு தங்குமிடம் வந்து ஓய்வெடுத்தோம்.
பிரச்சினைகள்
பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைகள், உடல் குறைபாடுகள் உட்பட அனைத்து குறைபாடுகள் நீங்க, சொந்த இல்லம் அமைய, அந்த இல்லத்திற்கு பட்டா விரைவில் கிடைக்க, இன்னும் ஆழமாக இல்லம் தேடி இறையரசு பற்றி அறிந்து, நம்பிக்கையில் ஊன்றி, இல்லம் தான் முதல் தலத்திரு அவை, நாம் தான் திருஅவை என்பதனை உணர, இதற்கு முதலில் செபங்கள், தேவைகள், உதவிகள் என தனி கவனம் வேண்டும்.
மறுநாள் காலையில், நம்பிக்கை விழா கொண்டாட புனித அந்தோணியார் திருத்தல வளாகம் வந்து சேர்ந்தோம். பங்கைச் சார்ந்த சுற்றியுள்ள மக்கள் , அனைத்து கிளைப் பங்குகளில் இருந்த மக்களையும் பள்ளி வாகனங்களில் ஏறி வரச் செய்து, விழா முடிந்ததும் திரும்ப அவரவர் இடங்களுக்கு செல்லவும், மிக அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்கள் அ.ப. அலெக்ஸ், அ.ப.அமிர்தராஜ், மற்றும் அ.ப. மரியப்பன். விழா தொடக்கத்தில் ஆவியானவரின் பாடலோடு தொடங்கி வரவேற்புரை நிகழ்த்தினார் அ.ப. ஜேசுதாஸ். வரவேற்பு யாருக்கு?
பட்டம், பதவி, பணம், அந்தஸ்து, உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என பாகுபாடின்றி அதுவும் இன்முகத்தோடு - கடமைக்கல்ல – முழுமனதோடு, பலமான கரங்களின் ஒலியோடு வரவேற்க வேண்டும். ஏன் கரங்கள் தட்ட வேண்டும்? தட்டும் போது இவ்வுலகிற்கு நான்கு நிலைகளை நாம் அறிவிக்கிறோம்.
அவர் கூறியது போல, அனைவரும் எழுந்து நின்று மரியாதையோடும், உற்சாகத்தோடும், மக்களும் நாங்களும் வரவேற்றோம்.
இடையிடையே, ஆவியானவரின் பாடலோடு தன்னார்வப் பணியாளர்களின் அனுபவப் பகிர்வு தொடங்கியது. அப்பகிர்வானது நிறைய எழுச்சி மிக்கதாக அமைந்தது.
பகிர்வுகள்
பிற சமயத்தை சார்ந்த தோழி மூலம், இறை இயேசுவை அறிந்து நேசித்து, அவருக்காக, அவரைப் போல் வாழ, அவரின் பிள்ளையாகிய ஒருவரை காதல் மணம் புரிந்தார்.
இன்று வரை, பெற்றோர் அன்பு இல்லாமையிலும் இதுவரை பேசாவிட்டாலும், இறையன்பு இவரை அதிசயமாக, அற்புதமாக வழி நடத்தியது.
உடல் சோர்வானாலும் , என்னால் முடியாது என்ற நிலையிலும் இங்கு அழைத்து வந்து பணிகளில் நிறைவு,
எனக்கு நல-வளம் தந்த இறைவன் உங்களுக்குத் தர மாட்டாரா’ நிச்சயமாக தருவார் என, ‘இறை வல்லமை பெற்று வாருங்கள்’ அடுத்த ஊர்களுக்கும் போவோம். அங்கும் நல்ல செய்திகளை சொல்ல வேண்டும். இதற்காகவே வந்தேன் என்ற இறை இயேசுவின் கூற்றை உறுதிப்படுத்த, நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் உண்டு பருகுவதால் நாங்கள் அனைவரும் இணைந்திருக்கிறோம்.
தடுக்கும் சுவரல்ல நாங்கள் - இணைக்கும் பாலமாக இருக்கிறோம். எவர் எங்களை எதிர்க்க இயலும் என்பதனையும் வழிபாடுகளில் மட்டுமல்ல, அதனை செயற்பாடுகளினால் செயலாக்கமும் செய்ய வேண்டும்.
எப்படி அறிவிக்க சென்று அறிவித்த இல்லங்களில் சில இல்லாமை இயலாமையிலும் எங்களைவிட ஆழமான திருவிவிலியத்தை அறிந்து ஆலயம் வருவதை தவிர்க்காமல் இருப்பது போன்ற பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அடுத்து அங்குள்ள அனைத்து மக்களிடமும் சந்திக்க வந்த தன்னார்வலர்கள் பற்றியும் சந்தித்ததால் ஏற்பட்ட அனுபவப் பகிர்வுகள்.
ஒரு குடும்ப பெற்றோர் - ஒரு மகள் - ஒரு மகன் மாற்றுத் திறனாளி, பேச இயலாதவர், கணவர் தான் அனைத்தும். சகோதரியின் ஆதரவு பேச்சு, தந்தைதான் எல்லாம் எனக் கூறியது. இதுதான் தலத் திருஅவை என்பதனை அறிவித்தது. இங்கு மேடையில், அழகாக கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் சொறிய பேசினான். அற்புதம் நிகழ்ந்தது வி.ப.04 ல் உள்ளது போல், பேச வாயும் நாவையும் கொடுத்தது யார் ? இறைவன்.
அகவை-மூப்பு, இப்போது இயலாமையிலும், பெண்களுக்கான பல பணிகள் சுய உதவிக் குழுக்கள் மூலமாக செய்ததை இன்றும் தொடர்கிறோம்.
ஒரே பிள்ளை குடிநோய்க்கு அடிமை எப்படியாவது ஓர் அடி கொடுத்தாவது இறைவா காப்பாற்று என வேண்டி, நோய் தாக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையின் செலவுகளுக்கு பணம் இன்றி தவித்து, அறிவித்து, உடனே பலர் உதவிகள் செய்து இன்று நலமடைந்து உள்ளார்.
‘பொருளாதாரம் மேம்பட வேண்டும் , எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் நம்பிக்கை இழக்க மாட்டோம்’. ‘இவர்கள் வந்து சந்தித்ததால் மிக்க மகிழ்ச்சி. நாங்களும் இப்பணிகளுக்கு எங்களை அர்ப்பணிக்கின்றோம்’ என பலர் பகிர்ந்தனர்.
திருப்பலிக்கு வர இயலாது என நினைத்தவர் அழகாக ஆடை உடுத்தி வந்தது அற்புதம்.
பின்பு, எவ்வித ஆடம்பரமும் இன்றி, மிக எளிமையாக கூட்டுத் திருப்பலி தொடங்கியது. மறையுரையில் அ.ப. ஜேசுதாஸ் ச.ச. அவர்கள் ஔவை கூறியது போல் “அரிதிலும் அரிது நாம் இறைவனின் பிள்ளைகளாக இருப்பது.” ‘அப்பாவிற்கு பிள்ளைகள் அடிமைகள் அல்ல; உரிமை உள்ளவர்கள்,’ எதை வேண்டுமானாலும் கேட்டு பெறலாம்.
கேட்காமலேயே தந்தை பாசத்தோடு நமக்கு உதவிகள் செய்வார். எப்படி பல படிநிலைகளில் இங்குள்ள மக்கள் அடிமைகளாக கைகட்டி சேவகம் செய்தவர்களை, அ.ப. வில்லானோவா அயலகத்தாராக இருந்தாலும், நமது மக்கள் மீது அன்பு கருணை கொண்டு, தனது சொத்து சேமிப்பு அனைத்தையும் செலவு செய்து, இல்லங்கள் கட்டிக் கொடுத்து வாழ்வாதாரம் மேம்பட, அவர்களை சுயமாக உழைத்து ஈட்ட வேண்டிய வழிமுறைகள் தந்து, இன்று முழு விடுதலைப் பெற்ற மக்களாக உயர்த்தி உள்ளாரோ, அதுபோல இதுவே அன்பும், அறமும் இணைந்த இறையரசுப் பணிகள். இதற்காகத்தான் இறைஇயேசு தனது இன்னுயிரை ஈந்தார். இப்பணிகளை தொடர்ந்து செய்யவே இறைவன் அழைத்து நாங்கள் வந்துள்ளோம். நாளை நீங்களும் இப்பணிகளை தொடர வேண்டும்.
“யார் இயேசு” என வினா எழுப்பி, “நமது பக்கத்தில் இருப்பவர்தான் இயேசு” எனக் கூறி அனைவரையும் எழுந்து ஒருவரை ஒருவர் கரம் பிடித்து வாழ்த்து சொல்ல சொன்னது, அதனை அனைவரும் செய்தது, புது விதமான ஆனந்த உணர்வுகளை ஏற்படுத்தியது. பங்கு அ.ப. அமைதியை பகிரும் வேளையில் மீண்டுமாய் இதனை செய்ய வைத்தது அருமை. வெகு சிறப்பாக திருப்பலி நிறைவேறியது .
கலை நிகழ்ச்சிகள், அன்பிய பொறுப்பாளர்கள், மக்களின் உதவிகளோடு பிள்ளைகள், மிக உற்சாகமாக, ஆடல் பாடல், நடனம், நாடகம் என அரங்கேற்றி வியக்க வைத்தனர்.
கானாவூர் திருமண விருந்து தொடங்கியது. கையேந்தி அல்ல - தட்டேந்தி அல்ல. எலியா அழைத்தது போல் ‘வாருங்கள் கொழுத்த உணவு, இனிமையான பானம் உண்டு மகிழுங்கள்’ என அ.ப. ஜேசுதாஸ் அழைக்க பந்தி அமர்த்தி பரிமாறி அனைவரும் உண்டு களித்தனர். பிறகு அனைவருக்கும் அனைத்திற்கும் நன்றியுரை கூறப்பட்டது. பிரிய மனமின்றி மக்கள் பள்ளி வாகனத்தில் ஏற அன்புடன் கையசைத்து விடை கொடுத்து விட்டு, நாங்களும் இல்லம் வந்து சேர்ந்தோம். அடுத்த பயணம் எப்போது என்ற ஆவலோடு நன்றி வணக்கம்.