இன்றைய இறைமொழி
சனி, 24 பிப்ரவரி 2024
தவக்காலம் முதல் வாரத்தின் சனி
இணைச்சட்ட நூல் 26:16-19. மத்தேயு 5:43-48
தூய்மையும் நிறைவும்
இஸ்ரயேல் மக்களின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையும், இயேசு வழங்கும் சீடத்துவ அழைப்பும் ஒரு பக்கம் கொடைகளாக இருந்தாலும், அவை சில கடமைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றன.
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களைத் தூய மக்களினமாகத் தெரிகிற கடவுள், அவர்கள் தூய்மை நிலையில் நிலைத்திருக்க வேண்டும் என மோசே வழியாக அறிவுறுத்துகிறார். தூய்மை நிலையை நோக்கிய பயணத்தில் அவர்கள் செய்ய வேண்டியவை இரண்டு: (அ) கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், (ஆ) ஆண்டவருடைய குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்.
நற்செய்தி வாசகத்தில், மலைப்பொழிவு அறிவுரையின் ஒருபகுதியாக அமைகிற இப்பகுதியில், அனைவருக்கும் காட்ட வேண்டிய அன்பு பற்றி முன்மொழிகிறார் இயேசு. சீடர்கள் காட்டுகிற அன்பு வானகத் தந்தை மக்கள்மேல் காட்டும் இரக்கம் போல, அனைவருக்கும் பொதுவானதாகவும், நிபந்தனைகள் இல்லாததாகவும் இருத்தல் வேண்டும். இறுதியாக, விண்ணகத் தந்தையைப் போல நிறைவுள்ளவராக இருக்குமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
தூய்மை என்பது தயார்நிலையின் முதற்படி. தூய்மை என்பது வழிபாடு அல்லது வேறுபாடு சார்ந்த தூய்மை அல்ல. மாறாக, கடவுளின் சொற்களை ஏற்றுக்கொள்ளும் அவற்றுக்குச் செவிமடுக்கும் எளிய, சரணாகதி மனநிலை. இத்தகைய மனநிலையில்தான் அன்னை கன்னி மரியா இருந்தார்.
நிறைவு என்பது தாராளநிலையின் முதற்படி. நிறைவான தந்தை தம்மிடம் உள்ள நிறைவைப் பகிர்ந்து கொடுத்தாலும் – மழையை, சூரிய ஒளியை – தம்மகத்தே தொடர்ந்து நிறைவாக இருக்கிறார். பாகுபாடு பாராட்டாத, அனைவருக்கும் முழுமையாக வழங்குகிற கடவுள்போல அன்பில் நிலைத்திருப்பதே நிறைவு.
தூய்மையும் நிறைவும் எட்டாத தூரம் போல இருந்தாலும், வாழ்வின் ஒவ்வொரு பொழுதும், ‘கொஞ்சம் அதிகம்’ என வாழ்ந்தால், செய்தால், இரக்கம் காட்டினால் அவற்றை நாம் அடைய முடியும்.
உங்கள் செயல்களைப் பொருத்து உங்கள் இலக்குகளை இறக்கிக்கொள்வதற்குப் பதிலாக, உங்கள் இலக்கை உயர்த்திக்கொண்டு செயல்களையும் அதற்கேற்ப உயர்த்துங்கள் என்பது இயேசுவின் அறிவுரையாக இருக்கிறது.
பகைவரிடம் அன்புகூர்வதும் துன்புறுத்துவோருக்காக இறைவேண்டல் செய்வதும் விண்ணகத் தந்தையின் மக்களாக சீடர்களை மாற்றுகிறது.
மற்றவர்களின் இருத்தல் மற்றும் இயக்கத்தைப் பொருத்து கதிரவனும் மழையும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்வதில்லை. எல்லார்மேலும் அடிக்கும் வெயிலாக, எல்லார்க்கும் பெய்யும் மழையாகக் கடவுள் நம்மேல் கடந்துசெல்கிறார்.
அப்படி இருக்க, நம் அன்பு மட்டும் ஏன் மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும் பொருத்து அமைய வேண்டும்?
நிற்க.
பாகுபாடு காட்டாத, பகுத்துப் பார்க்காத, தீர்ப்பிடாத அன்பு இருத்தால் கூட்டியக்க உறவுகள் சாத்தியமாகும். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 39).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: