இன்றைய இறைமொழி
சனி, 25 மே 2024
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – சனி
யாக்கோபு 5:13-20. மாற்கு 10:13-16
மதிப்புமிக்கவர்கள்!
இந்த ஆண்டு மே மாதம் 25, 26 நாள்களை அகில உலக குழந்தைகள் நாள் எனக் கொண்டாட வேண்டும் என நம் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுக்கிறார். இதுவே குழந்தைகளுக்கான திருஅவையின் முதல் உலக நாள். இந்த நாளுக்குரிய செய்தியின் தொடக்கமாக, ‘நீங்கள் மதிப்புமிக்கவர்கள்’ (காண். எசா 43:4) எனக் குழந்தைகளை அழைக்கிறார் திருத்தந்தை. நம் குழந்தைகள் கடவுளின் பார்வையில் மட்டுமல்ல, நம் பார்வையிலும் மதிப்புமிக்கவர்கள் என்பதை நமக்கு நினைவூட்டுவதோடு, அவர்களை மதிப்புமிக்கவர்களாக நடத்த நம்மை அறிவுறுத்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவுக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கத்தை நம் கண்முன் கொண்டுவருகிறது. குழந்தைகள் எபிரேய சமூகத்தில் ‘அஃறினையிலேயே’ வழங்கப்பட்டனர். அவர்களுக்கென்று எந்தத் தான்மையும் இல்லை. பெண்களையும் குழந்தைகளையும் ரபிக்கள் பொது வெளியில் சந்திப்பது ஏற்புடையதாக இல்லை. இந்தப் பின்புலத்தில் இயேசுவிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவதைத் தடை செய்கிறார்கள் சீடர்கள்.
சீடர்களின் இச்செயல்பாட்டைக் கடிந்துகொள்கிற இயேசு, ‘குழந்தைகளை என்னிடம் வர விடுங்கள்!’ என அவர்களை வரவேற்கக் கைகளை விரிக்கிறார்.
தொடர்ந்து, குழந்தைகளின் திறந்த உள்ளம் கொண்டவர்களாக சீடர்கள் இறையாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். குழந்தைகளுக்கு இயல்பாகவே பற்றுறுதி, சார்பு மனநிலை, ஏற்றுக்கொள்தல் ஆகியவை உண்டு. இவை மூன்றும் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கின்றன.
குழந்தைகளை வரவேற்கிற இயேசு அவர்கள்மேல் கைகளை வைத்து அவர்களுக்கு ஆசி வழங்குகிறார். இளவல்கள்மேல் இயேசு கொண்டிருக்கிற அக்கறையை இது எடுத்துக்காட்டுகிறது.
குழந்தைகளை வரவேற்பதற்கான திறந்த உள்ளம், குழந்தைகள் கொண்டிருக்கிற திறந்த உள்ளம் – இவை இறையாட்சியின் உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டியவை ஆகும்.
குழந்தைகள், வலுவற்றவர்கள், இளவல்கள் பற்றிய நம் பார்வை என்ன? அவர்கள்மேல் நாம் அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்டிருக்கிறோமா? குழந்தைகள் கடவுள்மேல் கொள்ள வேண்டிய நம்பிக்கையையும் சார்புநிலையையும் நாம் எப்படி வளர்க்கிறோம்?
இன்றைய முதல் வாசகத்தில், இறைவேண்டலின் அவசியம், ஆற்றல் ஆகியவை பற்றித் தம் குழுமத்துக்கு எழுதுகிறார் யாக்கோபு. குழந்தைகளுடைய திறந்த உள்ளம் இறைவேண்டலில் நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலை ஆகும்.
நிற்க.
யூபிலி 2025-க்கான தயாரிப்பு இறைவேண்டல் ஆண்டில், இறைவேண்டலின் ஆற்றலை உணர்ந்துகொள்ள முயற்சி செய்வோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 107).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: