இன்றைய இறைமொழி
செவ்வாய், 28 மே 2024
பொதுக்காலம் 8-ஆம் வாரம் – செவ்வாய்
1 பேதுரு 1:10-16. மாற்கு 10:28-31
சீடத்துவத்தின் வெகுமதி
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய இளவல் பாதி வழி வருகிறார் – திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தல். ஆனால், மீதி வழி செல்ல அவரால் இயலவில்லை – அவருக்கு சொத்து நிறைய இருந்தது. இந்தப் பின்புலத்தில், அனைத்தையும் விட்டுவிட்டு வந்த தங்களுக்கு என்ன ஆகும் என்ற பேதுருவின் கேள்விக்கு விடையளிக்கிறார் இயேசு.
அனைத்தையும் விட்டுவிட்ட சீடர்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வார்கள் என மொழிகிறார் இயேசு.
(அ) விட்டுவிடுதல் என்பது பெற்றுக்கொள்தல் என்பது முதல் பாடம்.
(ஆ) விட்டுவிடுதல் தருகிற உள்மனச் சுதந்திரத்தால் நாம் அனைவரையும் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. ‘ஒரு குழந்தையைச் சுமப்பதற்கான பேற்றை நான் இழந்ததன் வழியாக – துறவற அர்ப்பணம் – ஓராயிரம் குழந்தைகளுக்குத் தாய் ஆகும் பேறு பெற்றேன்’ என்கிறார் அன்னை தெரசா.
(இ) ‘முதன்மையானோர் கடைசி ஆவர். கடைசியானோர் முதன்மை ஆவர்’ என நற்செய்திப் பகுதி நிறைவுபெறுகிறது. செல்வத்தில் முதன்மையாக இருந்த இளவல் சீடத்துவத்தில் கடைசி ஆகிறார். சீடத்துவத்தின் வழியாக கடைசி நிலையில் இருந்தவர்கள் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்வதில் முதன்மை பெறுகிறார்கள்.
(ஈ) நம்பிக்கை, குழுமம், நோக்கம் என சீடர்களின் வாழ்க்கை விரிவடைவதை எடுத்துரைக்கிறார் இயேசு.
இன்றைய முதல் வாசகத்தில், துன்புறுகிற தன் திருஅவைக்கு அறிவுறுத்துகிற பேதுரு, துன்பங்களையும் தாண்டிய மாட்சியையும் மீட்பையும் எடுத்துரைக்கிறார். செயலாற்றுகிற மனம், அறிவுத் தெளிவு, பொறுமையுடன் கூடிய எதிர்நோக்கு ஆகியவை வழியாக நாம் கிறிஸ்துவின் அருளைப் பெற்றுக்கொள்கிறோம்.
நிற்க.
அனைத்தையும் விட்டுவிடுதலுக்கும் ஆண்டவரிடமிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கும் உள்ள இடைவெளியில் நமக்குத் தேவை எதிர்நோக்கு (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 109).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: