• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. ஞாயிறு, 5 மே 2024. கடவுளின் அருள்பெருக்கு

Sunday, May 5, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Gospel இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 5 மே 2024
பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு
திப 10:25-26, 34-35, 44-48. 1 யோவா 4:7-10. யோவா 15:9-17

 

கடவுளின் அருள்பெருக்கு

இயேசுவின் விண்ணேற்றமும் தூய ஆவியார் பெருவிழாவும் நெருங்கி வருகின்ற வேளையில் இன்றைய இறைவார்த்தை வழிபாடு கடவுளின் அருள்பெருக்கை நமக்கு நினைவூட்டுகிறது. நம் செயல்கள் ஒரு பக்கம் நமக்குப் பயன்களைத் தந்தாலும், கடவுளின் அருள்பெருக்கே மேலோங்கி நிற்கிறது என்றும், நீடித்த பயனைத் தருகிறது என்றும் மொழிகின்றன இன்றைய வாசகங்கள்.

 

இன்றைய முதல் வாசகப்பகுதியை பேதுருவின் மனமாற்றம் என அழைக்கலாம். திருத்தூதர் பணிகள் நூலில் எருசலேமிலிருந்து தமஸ்கு செல்லும் வழியில் பவுல் மனமாற்றம் அடைகிறார். பேதுருவின் மனமாற்றம் கொர்னேலியுவின் இல்லத்தில் நடந்தேறுகிறது. கொர்னேலியு ஓர் உரோமைப் படையின் நூற்றுவர் தலைவர். யூதர்களைப் பொருத்தவரையில் அவர் ஒரு புறவினத்தார். தன் யூத மேட்டிமை எண்ணத்தில் வாழ்கிற பேதுரு, புறவினத்தாரைத் தீட்டானவர்கள் எனக் கருதுகிறார். கடவுள் தூய்மை எனக் கருதுவதை மனிதர்கள் தீட்டு எனக் கருதக் கூடாது என்று காட்சிகள் வழியாக பேதுருவுக்குக் கற்பிக்கிறார் கடவுள். காட்சி முடிந்தவுடன் அவருடைய பயணம் கொர்னேலியுவின் இல்லம் நோக்கித் தொடங்குகிறது. பேதுருவைக் கண்டவுடன் அவருடைய காலில் விழுகிறார் கொர்னேலியு. உடனே பேதுரு, ‘நானும் மனிதன்தான். எழுந்திரும்!’ எனப் பணிக்கிறார். ‘நான்தான் கடவுள். நான் மட்டுமே தூயவர்’ என்ற நிலையிலிருந்த பேதுரு, காட்சியின் வழியாக, ‘நானும் மனிதன்தான்’ என்னும் அடிப்படையான உளமாற்றம் பெருகிறார். ‘கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை’ என அறிவிக்கிறார்.

 

பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போதே தூய ஆவியார் அனைவர்மீதும் இறங்கி வருகிறார். பேதுரு கைளை விரித்து இறைவேண்டல் செய்யாமலேயே தூய ஆவியார் வருகிறார். இங்கேதான் பேதுரு மனமாற்றம் அடைகிறார்.

 

ஒரு தோட்டக்காரரைப் போல கைகளில் மண்வெட்டி பிடித்துக்கொண்டு தண்ணீர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும், எவ்வளவு செல்ல வேண்டும் என கணக்கிட்டுக் கொண்டிருந்தார் பேதுரு. ஆனால் கடவுளோ திடீரென மழைபொழிவது போல தூய ஆவியாரைப் பொழிகிறார். வாய்க்கால்கள் நிறைந்தோடியதல்லாமல் பேதுரு கட்டிவைத்த பகுதிகளும் (‘பாத்தி’) உடைந்துகொண்டு போகின்றன. கடவுளின் அருள்பெருக்கின்முன் பேதுரு மௌனமாக நிற்கிறார். மீட்பு அனைவருக்கும் உரியது, கடவுள் அனைவர்மேலும் அருள்பொழிய வல்லவர் என்பதை உணர்கிற பேதுரு கூடியிருந்த அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார்.

 

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பிரியாவிடைப் பேருரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திராட்சைச் செடி-கொடிகள் உருவகத்தின் தொடர்ச்சியாக வருகிற இந்தப் பகுதியில், இயேசு தமக்கும் தம் சீடர்களுக்குமான நெருக்கத்தை மூன்று வாக்கியங்களில் வெளிப்படுத்துகிறார்: (அ) உங்களை நான் நண்பர்கள் என்றேன். (ஆ) உங்களைத் தேர்ந்துகொண்டேன். (இ) கனிதருவதற்காக உங்களை ஏற்படுத்தினேன்.

 

(அ) நட்பு

‘பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல’ என்று முன்னர் தம் சீடர்களுக்கு மொழிகிற இயேசு, இங்கே, ‘உங்களை நண்பர்கள் என்றேன்’ எனச் சொல்லி, நண்பர்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாததுபோல, அவர்களுக்கும் தமக்கும் இடையே எந்த ஒளிவும் மறைவும் இல்லை என்கிறார். இங்கே, நட்பு என்ற நிலையில் சீடர்கள் இயேசுவோடு நெருக்கமாகிறார்கள். மனிதர்கள் கடவுளோடு நட்பு பாராட்டும் அளவுக்கு கடவுள் இங்கே இறங்கி வருகிறார். ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்’ என்னும் புரிதலைச் சற்றே நீட்டி, ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டு நம்மைத் தம் நண்பர்களாக்கிக்கொண்டார்’ என்று சொல்லலாம். மேலும், நட்பு என்பது இயேசுவின் கொடை என்றாலும், அந்த நட்பில் அவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்றால், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார். இவ்வாறாக, நட்பு என்பது கடவுளின் கொடையாகவும் நம் கடமையாகவும் மாறுகிறது.

 

(ஆ) தெரிந்துகொள்தல்

‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ எனத் தம் சீடர்களுக்குச் சொல்கிறார் இயேசு. பழைய ஏற்பாட்டில், ஆண்டவராகிய கடவுள் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களைத் தம் சொந்த மக்களாக, இனமாகத் தேர்ந்துகொள்கிறார். தொடர்ந்து, சந்திப்புக் கூடாரம் ஏற்படுத்தப்பட்டபோது, அங்கே பணி செய்வதற்காக குருக்களாக லேவியரையும், தலைமைக்குருவாக ஆரோனையும் தேர்ந்துகொள்கிறார். நீதித்தலைவர்களை, அரசர்களைத் தேர்ந்துகொண்டு அவர்கள் வழியாக கடவுள் மக்களை அரசாள்கிறார். இறைவாக்கினர்களைத் தேர்ந்துகொண்டு மக்களைக் கண்டித்துத் திருத்துகிறார். தேர்ந்துகொள்தல் கடவுளிடமிருந்து வருகிறது. ஆக, இது கடவுளின் முன்னெடுப்பு. முழுக்க முழுக்க அவருடைய கொடையும் அருளுமாகும். தேர்ந்துகொள்தல் வழியாக ஒருவர் சிறப்பான இடம் பெறுகிறார். இந்தச் சிறப்பிடம் என்பது அவருக்கு பெருமையை அல்ல, மாறாக, பொறுப்பைத் தருகிறது. தேர்ந்துகொள்ளப்பட்ட நபர் அந்த நிலையிலேயே தொடர்ந்து நிற்க வேண்டும்.

 

(இ) கனிதருவதற்காக உங்களை ஏற்படுத்தினேன்

தேர்ந்துகொள்தலின் அடுத்த நிலையில், ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களுடைய வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கிறார். கனிதருவதற்காக இயேசு அவர்களை நியமிக்கிறார் அல்லது அவர்களுக்குப் பொறுப்பை வழங்குகிறார். கனிதருதல் என்பது இங்கே உருவகமாக உள்ளது. கனி இனிமையும் சுவையும் நிறைந்ததாக இருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் பசி தீர்க்கவும் பயன்படுகிறது. ஆக, சீடர்கள் தங்கள் இயல்பில் இனிமை கொண்டிருப்பதோடு, மற்றவர்களுடைய பசி தீர்க்கவும் தயாராக இருத்தல் வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என எழுதுகிறார் யோவான். நம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள அன்பே அடிச்சட்டமாக இருக்கிறது.

 

கடவுளின் அருள்பெருக்கினால் புறவினத்தார்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். கடவுளின் அருள்பெருக்கே சீடர்களை நண்பர்கள் நிலைக்கு உயர்த்தி, அவர்களைத் தேர்ந்துகொண்டு, அவர்கள் கனி தருவதற்காக அவர்களை ஏற்படுத்துகிறது.

 

இன்றைய நாள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

 

(அ) நன்றிப் பெருக்கு

கடவுளின் அருள்பெருக்கிற்கான நமது பதிலிறுப்பு நன்றிப்பெருக்கே. பேதுரு போல சில நேரங்களில் நாம் முற்சார்பு எண்ணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களாகவும் இருக்கிறோம். முற்சார்பு எண்ணமும் தீர்ப்பிடும் மனப்பாங்கும் நீங்கும்போது நன்றியுணர்வு பெருக்கிறது. கடவுள் நம்மேல் அருள்பொழிகிறார் என்னும் கருத்து நமக்கு ஆறுதல் தருவதோடு, அந்த அருளுக்கேற்ற செயல்களை நாம் செய்யுமாறு நம்மைத் தூண்டுகிறது.

 

(ஆ) கடவுளின் நண்பர்கள்

நம் நண்பர்களின் உடனிருப்பு, எண்ணம், செயல்கள் நம்மைப் பாதிப்பதோடு, அவை நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை மாற்றுகின்றன. அதனால்தான், ‘உன் நண்பன் யாரெனச் சொல். நீ யாரெனச் சொல்கிறேன்!’ என்று நாம் சொல்கிறோம். இயேசு நம்மைத் தமது நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார். சீடர்களாக அவரைப் பின்பற்றுபவர்கள் நண்பர்களாக அவரோடு உடன் பயணிக்க இயலும்.

 

(இ) அன்புக் கட்டளை

‘நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்’ என்பதே என் கட்டளை என்று புதிய கட்டளையை, அன்புக் கட்டளையை வழங்குகிறார் இயேசு. கடவுளிடமிருந்து பெறுகிற அன்பை நாம் ஒருவர் மற்றவருக்குப் பகிர்ந்துகொடுப்பதில்தான் அன்பு நிறைவு பெறுகிறது. நாம் அன்பு செலுத்துவதற்கும், அன்பைப் பெறுவதற்கும் தடையாக உள்ள பகைமை, கண்டுகொள்ளாத்தன்மை, எரிச்சல், வெறுப்பு, பயம், தயக்கம் ஆகியவற்றைக் களைதல் வேண்டும்.

 

இன்றைய பதிலுரைப்பாடலில், ‘உலகெங்கும் உள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 98). அனைத்தும் கடவுளின் அருள்பெருக்கே என்று உணர்வதே மாபெரும் விடுதலை உணர்வு.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: